ஆர்.ராம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது ஐ.நா.வின் முக்கிய பிரதிநிதிகளுடன் சந்திப்புகளைச் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜெனிவாவுக்கான பயணம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் தற்போது நடைபெறுகின்ற பிற்போக்குத் தனமான ஜனநாயக விரேதமான செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு செல்வதே பிரதான நோக்கமாகவுள்ளது.
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதோடு, அதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த வேண்டும் என்பதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
ஆனால், அரகலய போராட்டத்திற்கு பின்னர் ஆட்சியில் அமர்ந்துள்ள ரணில் விக்கிரமசிங்க தன்னை ஜனநாயகவாதிகாக பிம்பப்படுத்திக்கொண்டாலும், அவர் நாட்டை சர்வாதிகாரத்தினை நோக்கியே நகர்த்திச் செல்கின்றார்.
அத்துடன், சர்வதேசத்தினை ஏமாற்றும் நடவடிக்கைகளையும் அவர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார். இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் பொறுப்புக்கூறலையே, இனப்பிரச்சினைக்கான தீர்வினையோ அவரிடத்திலிருந்து எதிர்பார்க்க முடியாது.
இந்த விடயங்கள் உட்பட ஏனைய மனிதாபிமான சட்டங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளேன் என்றார்.