Our Feeds


Friday, March 24, 2023

ShortNews Admin

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு இரண்டு மாதங்கள் சம்பளமில்லை: வழங்க வழியேற்படுத்துமாறு சஜித் உரை



உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ள சுமார் 3 ஆயிரம் அரச பணியாளர்களுக்கு – இரண்டு மாதம் சம்பளம் கிடைக்கவில்லை என்றும், அது கிடைப்பதற்கு வழியேற்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்தார்


உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவது தொடர்பில் அரசாங்கத் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இன்று (24) நாடாளுமன்றில் இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களின் போதே அவர் இதனைக் கூறினார்.


நீதிமன்றம், உள்ளூராட்சி சபைகளுக்கான நிதியை வழங்குமாறு உத்தரவிட்டுள்ள நிலையில் அரசாங்கம் அதனை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது குற்றம் சுமத்தினார்.


அத்துடன் உள்ளூராட்சி சபைகளுக்கான நிதியை எப்போது விடுவிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.


2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டில் 0.08 வீதமான நிதியே, தேர்தல் ஒன்றை நடத்துவதற்கானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


எனினும், பிரதமர் தினேஸ் குணவர்த்தன, எதிர்க்கட்சி தலைவரின் கேள்விக்கு நேரடிப்பதிலை வழங்கவில்லை.


அதற்கு பதிலாக, நீதிமன்றத்தில் இது தொடர்பில் பல வழக்குகள் இருப்பதாக கூறிய அவர், நீதியின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுகிறது என்று குறிப்பிட்டார்.


அரசாங்கம், நீதிமன்றம் செல்லவில்லை என்றும் எதிர்க்கட்சியே நீதிமன்றம் சென்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »