ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தவிசாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமை தொடர்பில், தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியை ஊடகங்கள் மூலம் தான் கேட்டதாகவும் ஆனால் முறையான கடிதம் கிடைக்கவில்லை என்றும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை தவிசாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு ஏகமனதாக தீர்மானம் எடுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அழைக்கப்பட்ட போதிலும் அவர் கலந்துக்கொள்ளவில்லை என காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த பதவிக்கு பொருத்தமானவரை தற்போது கட்சி பரிசீலித்து வருகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அதன் தவிசாளராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பணியாற்றினார்.
எனினும், கடந்த வருடம் முதல் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு,சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நாடாளுமன்றில் செயற்பட்டு வருகின்றனர்.