எதிர்வரும் காலங்களில் உள்ளூராட்சி அல்லது மாகாண சபைத் தேர்தலை நடத்தும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
நிபுணர் குழுக்களை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதன் ஊடாக அது உறுதிப்படுத்தப்படும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதற்கிடையில், 200 மில்லியன் ரூபா மதிப்பிலான தேர்தல் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சகம் அறிவித்துள்ளது.
இதுவரை 40 மில்லியன் ரூபாவே கிடைத்துள்ளதாக அரச அச்சகர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
இந்த வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் மற்றும் அது தொடர்பான அனைத்து அச்சிடும் நடவடிக்கைகளுக்காக அரசாங்க அச்சகத்திற்கு 533 மில்லியன் ரூபா தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வாக்குப்பதிவுக்குத் தேவையான 87 இலட்சம் வாக்குச் சீட்டுகளில் இதுவரை 3 இலட்சம் வாக்குச் சீட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மீதமுள்ள பணிகளுக்குத் தேவையான நிதியைப் பெற்றுத் தருமாறு திறைசேரி செயலாளருக்கு அரச அச்சகர் அண்மையில் கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்.