ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு அமர்வில் பங்கேற்கும் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தொடர்பில் கேள்விக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்திற்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் 28 உறுப்பினர்கள் கொண்ட குழுவில் ஒரு உறுப்பினராக தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் மேஜர் ஜெனரல் ருவன் ஜீவக குலதுங்க கலந்துகொள்கின்றார்.
மேஜர் ஜெனரல் குலதுங்க, பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் செனல் 4 தொலைக்காட்சியில், போர் குற்றங்கள் குறித்து இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு (JDS) மறுக்க முடியாத சாட்சிகளை ஒளிபரப்பிய பின்னரும் இலங்கை இராணுவம் போர் குற்றங்கள் ஏதும் செய்யவில்லை என மறுத்த இராணுவ விசாரணை சபையின் ஒரு உறுப்பினராக இருந்தார்.
இலங்கையில் “தொடர்ச்சியாக மிகவும் கொடூரமான சித்திரவதை” செய்யும் ஒரு இராணுவ முகாமை நடத்திய குற்றச்சாட்டில் ஜீவக ருவன் குலதுங்க மற்றும் வேறு நால்வர் விசாரிக்கப்பட வேண்டுமென கடந்த 2017ஆம் ஆண்டு, உண்மை மற்றும் நீதிக்கான சரவதேச செயல் திட்டம் (ITJP) கோரியிருந்தது.
குறிப்பிட்ட அந்த முகாம் ஜோசப் முகாம் என்றழைக்கப்பட்ட வவுனியாவிலிருந்த பாதுகாப்பு படை முகாமாகும் (SFHQ/W). மோசமான சித்திரவதை மற்றும் பாலியல் வன்செயலுக்காக அறியப்படும் அந்த முகாமிற்கு 2016-17ஆம் ஆண்டுகளில் மேஜர் ஜெனரல் தலைவராக இருந்தார்.
தற்போது ஜெனீவாவில் கூடிய மனித உரிமைகள் குழு 2016ஆம் ஆண்டு தொடர்பில் இலங்கையிடம் நேரடியாக கேள்வி எழுப்பியிருந்தது.
“கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பாதுகாப்புப் படையினர் கடத்தல்கள், சட்டவிரோத தடுப்புகள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அரச தரப்பால் வடக்கு மாகாணத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் இன்னும் தொடரலாம் என வெளியாகும் செய்திகளுக்கு தயவு செய்து பதிலளிக்கவும், அது தொடர்பான குற்றச்சாட்டுகளின் விசாரணைகள் மற்றும் வழக்குகளின் விபரங்களை வழங்கவும்.” ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு கோரிக்கை விடுத்திருந்தது.
“ஆயுதப்படை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சித்திரவதைக்கு எதிரான நாட்டின் பொதுச் சட்டத்தின் கீழ் கிடைக்கும் தீர்வுகளுக்கு மேலதிகமாக, இராணுவச் சட்டம், கடற்படைச் சட்டம் மற்றும் விமானப்படைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தின் மூலம் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இராணுவச் சட்டத்தை அமல்படுத்த முடியும்.” என இலங்கை அரசாங்கம் பதிலில் கூறியது.
ஜோசப் முகாமிற்கு பொறுப்பதிகாரியாக குலதுங்க இருந்த காலத்தில் குறைந்தது மூவர் சித்திரவதை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் தெரிவிக்கின்றது. அந்த மூவரும் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல அவர்கள் மற்றவர்களில் ஓலங்களுக்கு சாட்சிகளாவும் உள்ளனர்.”ஆண் மற்றும் பெண் இருபாலரும், சிலர் அருகிலிருந்த சிறைக் கொட்டில்களில் அழுதும் ஓலமிடுவதையும் நான் கேட்டேன்” என் உயிர் தப்பிய ஒருவர் கூறினார்.
மனித உரிமைகள் தொடர்பான ஒரு கூட்டத்திற்கு புலனாய்வு பிரிவின் தலைவரை அனுப்பியது குறித்தும் செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மனித உரிமைகள் பாதுகாவலர்களை அச்சுறுத்தவா அது என அவர்கள் வினவியுள்ளனர்.
ஐ நா கூட்டங்களுக்கு சர்ச்சைக்குரிய வகையில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவரை அனுப்பியதற்காக இரண்டாவது முறையாக ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கடந்த 2016இல், சித்திரவதைக்கு எதிரான ஐ நா குழுவின்(UNCAT) விசாரணையில் இலங்கையில் தேசிய புலனாய்வு முகமையின் தலைவர் சிரிச மெண்டிஸ் இறுக்கமாக அமர்ந்திருந்தார். நாட்டின் குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவு (CID) மற்றும் பயங்கரவாத தடுப்பி விசாரணைப் பிரிவு (TID) ஆகியவை போர்க்காலம் மற்றும் அதற்கு பின்னரான காலப்பகுதியில் அவரின் கீழ் இருந்தது. அந்த சமயத்தில் இடம்பெற்ற சித்திரவதை மற்றும் பாலியல் வன்செயல் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் விசாரிக்கப்பட்டார்.
அந்த சமயத்தில் தற்போதைய ஜனாதிபதி விகரமசிங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் கீழ் பிரதமராக இருந்தார்.
சி.ஐ.டி அல்லது டி.ஐ.டி ஆகிய பதவிகளில் அவர் இருந்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களுக்காக நீதிமன்றத்தின் முன்னர் அவர் நிறுத்தப்படவில்லை. பின்னர் 2019ஆம் ஆண்டு நாட்டின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அதற்கு சில நாட்களுக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நாடாளுமன்ற தெரிவு குழுவின் முன்னர் நாட்டில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆகியவற்றிற்கு இருந்த அச்சுறுத்தல் குறித்து தான் அறிந்திருந்ததாக தெரிவித்திருந்தார்.