மஹரகமவில் அமைந்துள்ள முஸ்லிம்களின் பாரம்பரிய அரபுக் கல்லூரியான கபூரிய்யா அரபு இஸ்லாமிய கல்லூரியில் தற்போது, நம்பிக்கையாளர் சபையின் கோரிக்கைக்கு இணங்க மின்சார சபையினால் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கபூரிய்யா பழைய மாணவர் சங்கம் சார்பில் ShortNews செய்திச் சேவைக்கு அனுப்பி வைத்துள்ள முக்கியச் செய்தியில், மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியையும் அதன் உடமையான கிராண்ட்பாஸ் இடத்தையும், அவற்றின் நம்பிக்கையாளர்கள் என்ற பொறுப்பற்ற தரப்பினர் தமது சொந்த உடமையாக்கி அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தை தங்களுக்கானதாக்கிக் கொள்ள எடுக்கின்ற முயற்சிகளுக்கெதிராக கல்லூரியின் பழைய மாணவர்கள் சட்டத்தை நாடிய பொழுதிலிருந்து கல்லூரிக்கும் அதன் உடமைகளுக்கும், மாணவர்கள், உஸ்தாத்மார்கள் என அனைவருக்கும் பலவிதமான நெருக்கடிகளை (கல்லூரி நம்பிக்கையாளர் தரப்பு) தொடுத்து வருகின்றமையை அனைவரும் அறிந்ததே.
நூற்றாண்டை அடையவிருக்கும் இக்கல்லூரி இதுகாலவரை அனுபவித்திராத ஒரு புதுப்பிரச்சினையை அதன் ஸ்தாபகரின் நான்காவது பரம்பரை வாரிசான அஸ்மத் கபூரின் வருகையைத் தொடர்ந்து அனுபவித்து வருகின்றது. கபூர் ஹாஜியாரின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் விதமாகவும், கல்லூரியின் கல்வியியல் வரலாற்றையும், அடைவையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும், கேள்விக்குள்ளாக்கும் விதமாகவும் இவரது செயல்பாடுகள் இருக்கின்றன.
அந்தப் பின்னணியிலே நேற்று (03-03-2023) வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வையும் பார்க்க முடிகின்றது.
நேற்று பின்னேரம் சுமார் 03:00 மணியளவில் கல்லூரியின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு வழமையான துண்டிப்பாக இருக்கலாம் என கல்லூரியின் உள்ளக செயல்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் நினைத்திருக்கின்றனர்.
மாலை 06:00 மணியாகியும் மின்சாரம் கிடைக்கப்பெறாமையினால் கல்லூரி மாணவர் ஒருவர் மஹரகமையில் உள்ள மின்சார சபை அலுவலகத்தோடு தொடர்புகொண்டு விபரம் அறியவே, கல்லூரிக்கான மின்சேவையை துண்டிக்குமாரு தமக்கு எழுத்துமூலம் அறிவித்தல் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும், அதன் பிரகாரமே மின்துண்டிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.
கல்லூரியின் அனைத்து ஆவணங்களும் அண்மைக்காலம் வரை கல்லூரியின் பெயரிலே இருந்து வந்துள்ளன. எனினும் நம்பிக்கையாளர்கள் குறித்த இடங்களை ஆக்கிரமிக்கும் நோக்கோடு, கல்லூரியின் Assessment மற்றும் மின்சாரம், தண்ணீர் போன்றவற்றின் உரிமையை தங்களது குடும்பத்தின் பெயருக்கு மாற்றியிருக்கின்றனர். இதனைப் பயண்படுத்தியே கல்லூரியின் மின் இணைப்பை துண்டிக்கப்பட்டிருக்கிறது என எண்ணத் தோன்றுகிறது.
இந்த மிண்துண்டிப்பின் பின்னணியை அறிந்து கொள்ளும் பொருட்டு நாமும் மஹரகம மின்சார சபை அலுவலத்தோடு தொடர்பு கொண்டு மேலதிக தவல்களை கேட்டபோதும், “தமக்கு எழுத்துமூலம் கிடைக்கப்பெற்ற வேண்டுகோளிற்கினங்கவே மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டதாக” மீண்டும் உறுதிப்படுத்தினார்.
நாம் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் ஹூஸைன் கபூர் என்பவரைத் தொடர்பு கொண்டோம்.
“கல்லூரியில் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளதாகவும், அதுகுறித்து மின்சார சபை அலுவலகத்தோடு தொடர்பு கொண்ட போது, தமக்கு எழுத்து மூலம் அவ்வாரு கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே உங்கள் தரப்பிலிருந்து அவ்வாரான வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டனவா”? என்று கேட்டபோது, “ஆம், நாம் தான் கல்லூரிக்கான மின் இணைப்பை துண்டிக்குமாரு கூறினோம். அது எங்களது Board Decision” என்றும் தெரிவித்தார்.
“மாணவர்கள் தற்போது பரீட்சைக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். மின்சாரம் இன்றி மாணவர்கள் பெரும் அச்சத்திலே இருக்க வேண்டியிருக்கும”; என்று கூறியும் “பரவாயில்லை மாணவர்கள் அவற்றை அனுபவிக்கட்டும் என்று பொறுப்பற்ற முறையில், திமிராக பதில் கூறியுள்ளார்” ஹூஸைன் கபூர்.
கல்லூரியின் காவலர்கள் என்ற போர்வையில் செயல்படும் இந்த நம்பிக்கையார்கள் குறித்து சமூகம் விழிப்பாக இருக்க வேண்டும். இவர்களது சுய இலாபத்தை குறுக்கு வழியிலேனும் அடைந்துகொள்ள தடையாக இருக்கின்ற கல்லூரியின் பழைய மாணவர்கள், கல்லூரியையும் அதன் உடமையையும் பாதுகாக்க எடுக்கும் தூய நோக்கத்தை புரிந்து கொண்டு முஸ்லிம் சமூகம் கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பிற்கு ஒத்துழைக்க வேண்டும்.
கபூரிய்யா அரபுக் கல்லூரியையும் அதன் உடமையான கிராண்ட்பாஸ் இடத்தையும் வக்பு சொத்துக்களாக பிரகடனப்படுத்தவும், அவற்றை வக்பு சபையின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவதுமே கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பிரதான நோக்கமாகும். இதற்காக வேண்டியே வக்பு நியாய சபையில் வழக்கை தொடர்ந்திருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஐ.எல்.தில்ஷாத் முஹம்மத்
பொதுச் செயலாளர்.
புழைய மாணவர் சங்கம்.
கபூரிய்யா அரபுக் கல்லூரி, மஹரகம.