கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் சித்தி பெற்று அரச பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு உயர் கல்வியை தொடர்வதற்காக 8 இலட்சம் ரூபா கடன் வழங்கும் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக குறித்த மாணவர்களின் அன்றாட செலவுகளுக்காக மேலும் 3 இலட்சம் ரூபா கடன் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு கடன்களும் வட்டியின்றி வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்துள்ளார்.
நாட்டின் வட்டி வீதம் 25 சதவீதத்திற்கும் அதிக உயர்வடைந்துள்ளமையால் அதன் நன்மையை மாணவர்களுக்கும் வழங்கும் பொருட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய 5000 மாணவர்களுக்கு இந்தக் கடனுதவி வழங்கப்படவுள்ளது.
அத்தோடு இதுவரை இலங்கை வங்கியில் மாத்திரம் வழங்கப்பட்ட இந்தக் கடனுதவியை , இனிவரும் காலங்களில் மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி என்பவற்றின் ஊடாகவும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் இந்தக் கடன் ண புள்ளிகள் மற்றும் தொடரவுள்ள உயர் கல்வியின் முக்கியத்துவம் என்பவற்றின் அடிப்படையிலேயே வழங்கப்படும்.
மேலும் இக்கடன் உயர் கல்வியை நிறைவு செய்து பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி ஓராண்டு காலம் வரை வழங்கப்படும் என்பதோடு , தொழில் கிடைக்கப் பெற்றதன் பின்னர் அதனை மீள செலுத்துவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி மேலும் தெரிவித்துள்ளார்.