Our Feeds


Sunday, March 26, 2023

ShortNews Admin

சகல தரப்பினரதும் ஒத்துழைப்பின்றி தனித்து தேர்தலை நடத்த முடியாது; நாம் எந்த சந்தர்ப்பத்திலும் அரசியல் தேவைகளுக்காக செயற்படவில்லை - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்



(எம்.மனோசித்ரா)


ள்ளூராட்சி மன்றத் தேர்தல் மாத்திரமல்ல; எந்தவொரு தேர்தலையும் தேர்தல் ஆணைக்குழுவினால் தனித்து நடத்த முடியாது. அரசியலமைப்பு ரீதியில் தேர்தலுடன் தொடர்புடைய சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அத்தியாவசியமானதாகும். எனவே, சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எம் மீது மாத்திரம் குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அத்தோடு தேர்தல் தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன எம்மை அழைத்து பேசவுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவரது அழைப்பினை ஏற்று நாம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கும் எந்த சந்தர்ப்பத்திலும் ஆணைக்குழு தயாராகவே உள்ளதாகவும் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு இரண்டு சந்தர்ப்பங்களில் தினம் தீர்மானிக்கப்பட்ட போதிலும், நிதியின்மை காரணமாக திட்டமிட்டபடி, தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அரசாங்கத்தின் தேவைக்காகவே ஆணைக்குழு இவ்வாறு செயற்படுகின்றது என எதிர்க்கட்சிகள் விசனம் வெளியிட்டுள்ள நிலையில், பிரதமர் தினேஷ் குணவர்தன இது தொடர்பில் ஆணைக்குழுவை அழைத்து பேசவுள்ளதாக பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இது குறித்து வினவியபோதே ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தல் ஆணைக்குழு என்பது அரசியலமைப்பு ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டதாகும். ஏனைய நிறுவனங்களும் அவ்வாறே ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. 

எனவே, அரசியலமைப்பின் அடிப்படையில் தேர்தலுடன் தொடர்புடைய சகல நிறுவனங்களும், திணைக்களங்களும் ஒத்துழைத்தாலன்றி தனித்து எம்மால் எந்தவொரு தேர்தலையும் நடத்த முடியாது.

தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் காணப்படும் பிரதான சிக்கல் நிதியின்மையாகும். 

உயர் நீதிமன்ற உத்தரவின் பின்னரும் நிதி அமைச்சினால் தேர்தலுக்கான நிதி விடுவிக்கப்படாமலேயே உள்ளது. அவ்வாறிருக்கையில் எவ்வாறு எம்மால் தேர்தலை நடத்த முடியும்? அரசாங்கத்துக்கு நிதி நெருக்கடிகள் காணப்பட்டால் வெளிதரப்பினரிடமிருந்து நிதியை பெற்று தேர்தலை நடத்துவதற்கான எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பில் இல்லை.

வெளிதரப்பினரிடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வதற்கான சட்ட மூலமொன்றோ அல்லது அமைச்சரவை யோசனையொன்றோ முன்வைக்கப்பட்டால் அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். ஆனால், நாட்டில் அவ்வாறான ஏற்பாடுகள் இல்லை. அத்தோடு இவ்விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டுமெனில், அதற்கான நிதியையும் நிதி அமைச்சு அல்லது திறைசேரியிடமிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், இதில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்துழைப்பும் எமக்கு கிடைக்கவில்லை. எனவே, தனியார் சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் நிதி நெருக்கடி தாக்கம் செலுத்துகின்றது. இவை தொடர்பில் சிந்திக்காமல் சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக ஆணைக்குழு மீது குற்றஞ்சுமத்துவது ஏற்புடையதல்ல. உரிய காலத்தில் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஆணைக்குழு ஸ்திரமாகவுள்ளது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »