வரலாற்றுப் புகழ் பூத்த கபூரிய்யா அரபுக் கல்லூரியை பொதுமக்களின் உடமையாக்குவதற்கு முழு சமூகமும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும். இல்லா விட்டால் பொது மக்களுக்கான வக்பு சொத்துக்களை நாம் தொடர்ந்தும் இழப்பதை தவிர்க்க முடியாது. என ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் விவகாரங்களுக்கான கம்பளை பகுதி செயலாளர் பஸ்லான் பாரூக் தெரிவித்துள்ளார்.
கபூரிய்யா அரபுக் கல்லூரிக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கபூர் ஹாஜியார் அவர்கள் தனது சொந்த நிதியில் முஸ்லிம் சமூக இளைஞர்களின் எதிர்கால வாழ்வுக்காக தானே முன்னின்று உருவாக்கியதுதான் கபூரிய்யா அரபுக் கல்லூரியாகும். சுமார் 17 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பமாக இது உருவாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது அதன் பெரும் பகுதிகள் பலராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள பகுதிகளையும் தமது குடும்ப சொத்தாக மாற்றி மீண்டும் அதனை கைப்பற்றிக் கொள்ளும் இழிவான காரியத்தில் மரியாதைக்குறிய கபூர் குடும்பத்தின் 4வது வாரிசாக அறியப்படும் ஒரு நபர் மும்முரமாக ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.
பொதுமக்களுக்காக தனது பாட்டனார் அன்பளிப்பாக - வக்பு சட்டத்தின் கீழ் வழங்கிய புனிதப் பணிக்கான ஒரு சொத்தை அபகரிக்க முயலும் யாராக இருந்தாலும் அவர்கள் இறைவனை அஞ்சிக் கொள்ள வேண்டும்.
கபூரிய்யா கல்லூரிக்காக வழங்கப்பட்டு கொழும்பு, க்ரேன்பாஸ் பகுதியில் அமைந்திருக்கும் சுலைமான் மருத்துவமனை வளாகத்தை தற்போது கபூர் குடும்பம் சார்பில் அபகரித்துக் கொண்டுள்ள நிலையில், மஹரகம, கபூரிய்யா அரபுக் கல்லூரி வளாகத்தையும் அபகரிக்கும் இறுதிக் கட்ட முயற்சி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மத்ரஸாவின் மின்சாரத்தை துண்டித்தது முதல் பலவிதமான ஈனச் செயல்களையும் செய்ய கபூரிய்யா நம்பிக்கையாளர் சபையின் கபூர் குடும்ப 4ம் தலைமுறை வாரிசு தயாராகி விட்டதை நாம் காண முடிகிறது.
இன்று 19ம் திகதி கபூரிய்யா வளாகத்திற்கு தற்போது இருக்கும் சுமார் 12க்கும் உட்பட்ட மாணவர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு குறித்த வீடியோ சமூகப் பற்றுக் கொண்ட யாருடைய உள்ளத்தையும் கலங்கடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உங்கள் பிள்ளைகளுக்கு இந்நிலை ஏற்பட்டால் பார்த்துக் கொண்டிருப்பீர்களா என்று அந்த மாணவர்கள் கேட்க்கும் கேள்விகள் உள்ளத்தை பிய்த்து எடுக்கின்றன.
இந்நிலையில், அரசியல் தலைவர்கள், ஆன்மீகத் தலைவர்கள், சிவில் அமைப்புகள், பள்ளிவாயல் சம்மேளனங்கள் என அனைத்துத் தரப்பினரும் ஓரணியில் திரண்டு சமூகத்திற்கான சொத்தான கபூரிய்யாவையும் அதன் வக்பு சொத்துக்களையும் பாதுகாக்க முன்வர வேண்டும். இதற்கான முயற்சிகளை யார் முன்னெடுத்தாலும் முழு மனதுடன் அவர்களுடன் கைகோர்த்து ஜனநாயக வழியிலும், சட்ட ரீதியாகவும் போராட நான் எப்போதும் தயார் என்பதையும் இவ்விடத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.
“சமூகப் பற்றுள்ள அனைவரும் இந்த விவகாரத்தில் உடனடியாக குரல் எழுப்புங்கள்”