சுமணசிறி குணதிலக்க
வெல்லவாய, எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றிருந்த நிலையில் காணாமல் போன இளைஞர்கள் நால்வரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய மூவரின் சடலங்களும் புதன்கிழமை (22) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி யூ.ஜி.சந்திரகுமார தெரிவித்தார்.
பொத்துவிலுக்கு செல்வதாக தெரிவித்து வீட்டிலிருந்து 5 மோட்டார் சைக்கிள்களில் புறப்பட்ட 10 இளைஞர்கள் எல்லேவல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்றுள்ளனர்.
எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த பகுதியில் நீராடிய போதே 4 பேர் மூழ்கியதாகவும் அதில் ஒருவரின் சடலம் செவ்வாய்க்கிழமை (21) மீட்கப்பட்ட போதும் சீரற்ற வானிலையால் ஏனையோரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
புதன்கிழமை (22) காலை முதல் கடற்படையினரும் பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து நடத்திய தேடுதலில் ஏனைய மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனைகளின் பின்னர் நால்வரின் சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை, சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 20 வயதான அபூபக்கர் ஹனாஃப், முஹம்மது நஹ்பீஷ், மொஹமட் லபீர் மொஹமட் சுஹூரி, முகமது அப்சல் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.