ஜா -எல பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் ஒன்றின் வெளிப் பகுதி முழுவதும் ஆபாச வார்த்தைகள் எழுதப்பட்டு ஜீப் வண்டிக்கு சேதம் விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ஜீப் வண்டியின் சாரதியான பொலிஸ் சார்ஜன்ட் நேற்று முன்தினம் (27) ஜீப்பை சுத்தம் செய்வதற்காக பொலிஸ் கராஜில் நிறுத்திவிட்டு பின்னர் வந்து பரிசோதித்தபோது அதன் கதவுகள், பொனட் ஆகியவற்றில் இந்த ஆபாச வார்த்தைகள் எழுதப்பட்டிருந்ததைக் கண்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் குறித்த ஜீப்பின் சில இடங்களுக்குச் சேதமும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாறு செய்தவர்கள் தொடர்பில் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்டுவதாக பொலிஸார் கூறினர்.