உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறுவதற்கான சாத்தியம் அரிதாகவே உள்ளது. பொது இணக்கப்பாட்டுடன் தேர்தலை மூன்று அல்லது நான்கு மாத காலத்துக்குள் நடத்த வேண்டும்.
தேர்தலை நடத்தாவிட்டால் எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் முரண்பாடு தோற்றம் பெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் கூறுகையில்,
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரச அச்சுத் திணைக்களம் ஆகிய தரப்பினரது கருத்துக்களை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுவது சாத்தியமற்றதாக உள்ளது.
340 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அரச அதிகாரிகளினால் உள்ளூராட்சி மன்றம் நிர்வகிக்கப்படுவது ஜனநாயகத்துக்கு முரணானது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு பல நெருக்கடிகள் தோற்றம் பெற்றுள்ளன.
தேர்தல் தொடர்பில் சகல தரப்பினரும் பொது இணக்கப்பாட்டுக்கு வந்து ஒரு தீர்மானத்தை எடுத்து தேர்தலை வெகுவிரைவாக நடத்த வேண்டும். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ஏற்கெனவே மேலதிகமாக ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் மன்றங்களின் பதவிக் காலத்தை மேலும் நீட்டித்தால், அது பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்தும்.
ஆகவே, ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து தேர்தலை வெகுவிரைவில் நடத்த வேண்டும்.
ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடத்த வேண்டும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாவிட்டால் எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் முரண்பாடுகள் தோற்றம் பெறும்.
தேர்தல் இல்லாமல் அறிக்கை சமர்ப்பித்தால் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் பாராளுமன்றம் ஒரு தீர்மானத்தை எடுக்க நேரிடும். அந்த தீர்மானம் எத்தன்மையில் அமையும் என்பதை எதிர்பார்க்க முடியாது என்றார்.