போயான தினத்தன்று பியர் குடித்த பிக்கு ஒருவர் பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அந்த பௌத்த பிக்குக்கு பியர் விற்பனைச் செய்த சம்பவம் தொடர்பில் கலால் திணைக்கள அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சிவனொளிபாதமலைக்குள் செல்லும் நல்லத்தண்ணி நகரிலுள்ள சுற்றுலா சபையின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட சுற்றுலா ஹோட்டலிலேயே இவ்வாறு பிக்கு ஒருவருக்கு பியர் விற்பனைச் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா ஹோட்டலுக்கு சுற்றுலா சபையின் ஊடாக வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரத்துக்கு முரணாக, அந்த ஹோட்டலின் உரிமையாளரால் கடந்த 6ஆம் திகதி போயா தினத்தன்று பிக்கு ஒருவருக்கு, அந்த ஹோட்டலிலேயே அமர்ந்திருந்து பியர் அருந்துவதற்கு அனுமதியளித்தமை தொடர்பில், பிரதேசவாசிகளால் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பியரை குடித்துக்கொண்டிருந்த பிக்கு, போதை தலைக்கேறியதும் அங்கிருந்த நபர்களை கடுமையான தூசனவார்த்தைகளால் திட்டித்தீர்த்துள்ளார். அத்துடன் நகரில் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளார். இதுதொடர்பில் நல்லத்தண்ணி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த சுற்றுலா ஹோட்டலில் போயா தினத்தில் களவான முறையில் பியர் விற்பனைச் செய்யப்படுவதாகவும் பியரை கொள்வனவு செய்யும் நபர்கள் அந்த பியர் போத்தல்களை உடைத்து, ஷொப்பி பேக்கில் ஊற்றி, சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகர்களாக வரும் இளைஞர்களுக்கு அதிக விலைக்கு விற்பனைச் செய்யப்பட்டுள்ளமையும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
(ரஞ்சித் ராஜபக்ஷ)