பிறப்புப் பதிவின் போது பெற்றோர் திருமணமானவரா என வினவப்படுவதை கூடிய விரைவில் நீக்க வேண்டும். சமூகத்தில் தனித்து வாழக்கூடிய திறன் ஒரு தாய்க்கு இருக்க வேண்டும். அது வெட்கப்படுவதற்கான விடயமல்ல என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க நேற்று (13) தெரிவித்தார்.
குழந்தையை வளர்க்க முடியாத நிலையிருந்தால் அந்தக் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கத் தயாராக இருப்பதாகவும், குழந்தைக்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்படும் என நினைத்தால் 1929 என்ற எண்ணுக்கு அழைக்குமாறும் தெரிவித்தார்.
எல்லாப் பெண்களும் இந்த எண்ணை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கருக்கலைப்பு ஒரு சரியான விடயம் அல்ல என்பது தனது சொந்த கருத்து எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக பிறந்த குழந்தையை கழிவறையில் விட்டுச் செல்வது, பிள்ளையை இறால் கூண்டில் தள்ளி கொல்ல முயற்சிப்பது, வெளிநாட்டில் உள்ள மனைவிக்கு பணம் அனுப்ப அழுத்தம் கொடுத்து குழந்தையை அடிப்பது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதாக அமைச்சர் கூறினார்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் சிறுவர்களுக்கான 350 ற்கும் மேற்பட்ட இல்லங்களை வழங்கியுள்ளன. ஒரு பெண் இரவில் வீட்டை விட்டு வெளியேற நினைத்தால் இடையூறுகளுக்கு ஆளாகாமல் இவ்வாறான இல்லங்களுக்கு செல்ல முடியும்.
செய்தித் திணைக்களத்தில் நேற்று (13) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.