பாகிஸ்தானில் கடந்த 2018- ம் ஆண்டு இம்ரான் கான் பிரதமராக இருந்த போது வெளிநாட்டு தலைவர்கள் அளித்த பரிசு பொருட்களை மலிவு விலையில் சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக வழக்கு இஸ்லாமாபாத் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் பல முறை இம்ரான்கான் ஆஜராகாததால் அவருக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் பொதுக்கூட்டம் ஒன்றில் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் இம்ரான்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கிலும் அவருக்கு பிடி வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் பரிசு பொருட்கள் வழக்கில் வருகிற 18-ம் திகதியும், நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் 21- ம் திகதியும் இம்ரான்கானை பொலிஸார் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று காலை வரை அவரை கைது செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இம்ரான் கானை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவரது கட்சியான தெக்ரீக்-இ- இன்சாப் கட்சி தொண்டர்கள் லாகூரில் உள்ள அவரது வீடு முன்பு திரண்டனர்.
தங்கள் கட்சி தலைவரை கைது செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். திடீரென அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
இம்ரான்கானை கைது செய்ய வந்திருந்த பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 54 பொலிஸார் காயம் அடைந்தனர். மேலும் இம்ரான் கான் ஆதரவாளர்கள் காவல்த்துறையினரின் வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர்.
இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.
அப்போது பொலிஸாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சில தொண்டர்கள் காயம் அடைந்தனர்.
இதையடுத்து வன்முறையில் ஈடுபடும் இம்ரான்கான் ஆதரவாளர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பஞ்சாப் மாகாண பொலிஸ் அதிகாரி ஐ.ஜி. உஸ்மான் அன்வர்
இம்ரான்கானை கைது செய்ய முயன்றபோது அதனை தடுக்கும் வகையில் அவரது கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பொலிஸார் வாகனங்கள், பொது சொத்துகளை அவர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
சி.சி.டி.வி கேமிராவில் பதிவான காட்சிகளைவைத்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் தீவிரவாத சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.