அரசியலுக்கு வரவில்லை என்றால் தான் ஒரு விமானி ஆக வேண்டும் என ஆசைப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பயணிகளின் உயிருக்கு விமானி பொறுப்பாளியாக இருப்பது போல் அரசாங்கத்திற்கும் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது . அரசாங்கம் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக அதை வலுவற்றதாக்கிக் கொண்டு இருக்கிறது என கடந்த சனிக்கிழமை கொலன்னாவையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது அவர் தெரிவித்தார்.
யுத்த காலத்தில் கூட அப்போதிருந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்து ஆலோசித்து IMF இன் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்தியிருந்தார். ஆனால் ஒருபோதும் மக்கள் மீது சுமையை ஏற்றும் திட்டங்கள் முன்மொழிவுகளுக்கு அவர் உடன்படவில்லை.
அப்போது இலங்கையின் சொந்த திட்டங்களை IMF விடம் முன்வைக்க அவரால் முடிந்தது. ஆனால் இப்போது IMF முன்மொழியும் திட்டங்களை நாங்கள் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதுதான் இப்போதைய அரசாங்கத்திற்கும் அப்போதைய அரசாங்கத்திற்கும் இருக்கும் வித்தியாசம் என அவர் தெரிவித்தார்.