கபூரிய்யா அரபுக் கல்லூரி விவகாரம் தொடர்பில் கல்லூரி நிர்வாகத்தை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வக்ப் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
நிர்வாகத்தினரின் பணிப்பின் பேரில் மின்சார நிலையம் கடந்த வாரம் கல்லூரிக்கு வழங்கப்பட்டிருந்த மின்சாரத்தை துண்டித்திருந்தது. நேற்று நடைபெற்ற வக்ப் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பாக கபூரியா சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் முறையிட்டிருந்தனர்.
கபூரியா மாணவர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கையை கண்டித்ததுடன், உடனடியாக நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஏழை மாணவர்கள் கற்கும் இக் கல்லூரிக்கு நடந்திருப்பது போன்று கொழும்பு ரோயல் கல்லூரிக்கு நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நீதிமன்றத்தில் அவர் கேள்வி எழுப்பினார். நிர்வாகத்தின் பணிப்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் கல்லூரியின் பெயரிலிருந்த மின் இணைப்பு மாற்றப்பட்டே மின்சாரத்தை துண்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது .
பல நாட்களாக இருளில் இருந்த இம்மத்ரஸாவும் இங்குள்ள பள்ளிவாசலுக்கும் பழைய மாணவர்கள் முயற்சியால் ஜெனரேட்டர் ஒன்று பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
மிருகத்தனமான செயலில் ஈடுபட்ட கல்லூரி நிர்வாகத்தின் ஆளுநர்களை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு சட்டத்தரணி கோரிக்கை முன்வைத்தார். இதன்படி அடுத்த அமர்வில் கபூரிய்யா மத்ரஸாவின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை நீதிமன்றத்துக்கு ஆஜர் செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டார். மேன்முறையீட்டு நீதிமன்றம் அதன் தலைவர் ஒய்வுபெற்ற நீதிபதி அப்துல் மஜீத் தலைமையில் நேற்று நடைபெற்றது .