(எம்.நியூட்டன்)
தமிழர் பிரதேசங்களில் ஆலயங்கள் அழிக்கப்படுவது மற்றும் பௌத்த மயமாக்குவதை கண்டித்து வியாழக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கு மதங்கள், கட்சிகள் கடந்து ஒன்றிணையவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அழைப்பு விடுத்துள்ளதுடன் வெடுக்கநாறிமலை ஆதிசிவன் ஆலயம் அழிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெடுக்கு நாறிமலை ஆதிசிவன் ஆலயம் அழிக்கப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதுடன் இது தொடர்பில் அன்று மாலையே எம்முடன் தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
வவுனியா நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையிலுள்ள ஆலயம் இந்து மக்களின் வணக்க ஸ்தலாமக இருந்திருக்கின்றது. அங்குள்ள பல சிலைகள் அங்கே நாட்டப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசம் முழுவதும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
அப்படி இருக்கம் போது என்ன காரணத்திற்காக யாரால் இங்குள்ள சிலைகள் தோண்டி எடுக்கப்பட்டு அழிக்கப்பட்டு காடுகளுக்குள் வீசப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மீண்டும் அந்த ஆலயத்தை திருப்பிக் கட்டிக்கொடுக்கவேண்டும்.
சிலைகள் அங்கு நிறுவப்பட வேண்டும் இந்து மக்களின் மத உரிமையை நீங்கள் பாதுகாக்கவேண்டும் என்று ஜனாதிபதியிடம் கூறியுள்ளேன். அதற்கு அவர் இப் பிரச்சினை தொடர்பான விபரங்களை எனக்கு எழுதி அனுப்பி வைக்கும் படியும் அதற்குப் பொருத்தமான நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அதற்கு அமைய நானும் அவ் விபரங்களை அவருக்கு அனுப்பி வைத்துள்ளேன்.
தமிழ் மக்களின் வரலாற்றில் இத்தகைய சம்பவமானது தொடர்ச்சியாக எமது நாடு சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து இடம்பெற்று வருகின்றது. தமிழ் மக்களின் பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவது. தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பது. பௌத்த சின்னங்கள் வைப்பது. இந்து ஆலயங்கள் அழிக்கப்படுவது. இவ்வாறு தொடர்ச்சியான பல நிகழ்ச்சி நிரல்கள் இடம்பெற்று வந்த காரணத்தினால் இலங்கை தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் அடிப்படைக் காரணங்கங்களாக உள்ளது.
தந்தை செல்வநாயகம் ஆரம்பம் தொட்டு தமிழ்த்தேசிய இனத்துக்கு விடுதலைவேண்டும். சுதந்திர தமிழரசு வேண்டும் என்று 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற வெற்றி விழாவில் பேசியுள்ளார். அந்த அடிப்படையில்தான் இலங்கை தமமிழரசுக் கட்சி ஆரம்பித்து தமிழ் மக்களின் நிலங்கள் பௌத்தமயமாக்கல் நடைபெற்று வருவதற்கு எதிராக தொடர்ச்சியான நீண்ட போராட்டம் ஆயுதப் பேராட்ட இடம்பெற்றதை நாம் அறிவோம். இந்தப் பிரச்சினை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருப்பதையும் நாம் அறிவோம்
இந்நிலையில், தற்போதைய சூழலில் இனவாதம் மொழிரீதியாக தமிழர்களின் பிரதேசங்களை அபகரிப்பதற்கு சிங்கள பௌத்த பிக்குகள் நடவடிக்கை எடுப்பதாகவே நாங்கள் இதைப் பார்ககின்றோம். இந்தச் செயற்பாட்டை நிறுத்த நீதிக்காக போராடுகின்ற அனைத்துக் குழுக்களும் அனைத்துத் தமிழ் மக்களும் இந்து மக்களும் குரல் கொடுக்கவேண்டும். அப்படியான சந்தர்ப்பத்தில் தான் இவ்வாறான நிலைமைகள் நடைபெறாது கண்டிக்கவேண்டும் அதை நிறுத்தி தமிழ் தேசியத்தின் தமிழ் மக்களின் விடுதலைக்கு ஆதரவு வழங்கினால் தான் இப்படியான நிகழ்வுகள் இடம்பெறாது தடுக்கமுடியும்.
ஏதிர்வரும் வியாழக்கிழமை நாங்கள் அனைவரும் கட்சிகளுக்கு அப்பால் மதங்களுக்கு அப்பால் வவுனியாவிலே பெரியபோராட்டத்திற்கு ஆயத்தம் செய்கின்றோம். இன ரீதியாக மொழி ரீதியாக தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கின்ற சம்பவங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு அனைவரும் ஒன்றிணையவேண்டும்.
கச்சதீவில் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது என்ற செய்திகள் வெளிவந்துள்ளது. கச்சதீவில் கிறிஸ்தவ ஆலயம் தான் அங்கே இருக்கின்றது. அங்கு இடம்பெறுகின்ற திருவிழாவில் இலங்கை இந்திய மக்கள் மதங்களைக் கடந்து அங்கு சென்று வழிபடுகின்றார்கள். அங்கு பௌத்த சின்னம் ஒன்று நிலைநாட்டப்படுகின்றது என்ற செய்தி தற்போது வந்திருக்கின்றது. இவ்வாறு பௌத்த மத ஆதிக்கத்தை சிங்கள இன ஆதிக்கத்தை நாட்டிலே நிலை நாட்டுகின்ற செயற்பாட்டுக்கு இந்த அரசு இருக்குமேயானால் இந்த நாடு ஒன்றுமையாக இருக்கமுடியாது பிளவு பட்டுப்போயிருக்கும் போராட்டங்கள் இப்போது தனிந்திருந்தாலும் தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும் என்றார்.