(எம்.மனோசித்ரா)
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு பொறுத்தமான தினம் குறித்து பல தரப்பினராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் , எதிர்வரும் இரு தினங்களுக்குள் இடம்பெறவுள்ள பல்தரப்பு தீர்க்கமான கலந்துரையாடலின் பின்னரே உத்தியோகபூர்வமாக தினம் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா கேசரிக்கு தெரிவித்தார்.
அரசியலமைப்பின் பிரகாரம் ஏற்கனவே திட்டமிட்ட தினத்தில் தேர்தல் நடத்தப்படாமல் , அதற்கான புதிய தினம் அறிவிக்கப்பட வேண்டுமெனில் பழைய தினத்திலிருந்து 21 நாட்களின் பின்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கமைய ஏப்ரல் முதலாம் வாரத்தில் தேர்தல் இடம்பெறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் ஏப்ரல் இரண்டாம் வாரம் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நீண்ட விடுமுறை என்பதால் குறித்த காலப்பகுதியில் தேர்தலை நடத்த முடியாதெனக் கூறி தேர்தல் ஆணைக்குழு , அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தியுள்ளன.
இவ்வாறு பலராலும் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையிலேயே ஆணைக்குழுவின் தலைவரை தொடர்பு கொண்டு வினவிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தேர்தலை நடத்துவதற்கான புதிய தினம் குறித்து ஆணைக்குழு இன்னும் தீர்மானங்கள் எவற்றையும் எடுக்கவில்லை. இவ்விடயம் கலந்துரையாடல் மட்டத்திலேயே உள்ளது. எனவே தான் அடுத்த வாரம் மீண்டும் கூடி இது தொடர்பில் அறிவிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம். அடுத்த கூட்டத்தில் எம்மால் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவல்களுடனும் கலந்துரையாடப்பட்ட பின்னரே தினம் உறுதி செய்யப்படும் என்றார்.