Our Feeds


Friday, March 10, 2023

ShortNews Admin

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் - கல்வி அமைச்சர் உடனடி விசாரணைக்கு உத்தரவு



(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


கொழும்பு பல்கலைக்கழகத்துக்குள் பிரவேசித்து படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு  உள்ளக நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் உரிய பணிப்புரைகளை விடுத்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) எதிர்க்கட்சி எம்பி புத்திக்க பத்திரண எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர்  இவ்வாறு தெரிவித்தார்.

புத்திக பத்திரண எம். பி தமது கேள்வியின் போது,

கடந்த 08ம் திகதி இடம்பெற்றுள்ள ஆர்ப்பாட்டத்தின் போது படையினர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் உள்ளே பிரவேசித்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டதன் காரணத்தாலேயே ஒருவர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகம் நாட்டின் ஜனாதிபதியும் சபாநாயகரும் கல்வி அமைச்சரும் கல்வி பயின்ற பல்கலைக்கழகமாகும்.

அத்தகைய புகழ்மிக்க பல்கலைக்கழகத்துக்குள் படையினர் பிரவேசித்து இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமை கவலைக்குரியது. அது தொடர்பில் கல்வியமைச்சர் என்ற வகையில் தாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர்

பெரும்பாலும் பல்கலைக்கழகங்களில் நிலவிய உள்ளக பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையிலேயே பாலி பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி அமைச்சுக்குள் பிரவேசித்து அன்று குழப்பத்தை ஏற்படுத்தினர்.

அதேவேளை பல்கலைக்கழகங்களுக்குள் காணப்படும் உள்ளக பிரச்சினைகளை விடுத்து தற்போது நாட்டின் பொது பிரச்சினைகளுக்காகவே பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

என்றாலும் கொழும்பு பல்கலைக்கழகத்துக்குள் பிரவேசித்து படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்ளக நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் உரிய பணிப்புரைகளை விடுத்திருக்கிறேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »