(எம்.மனோசித்ரா)
உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் அச்சுறுத்தல் மிக்கதாகும். குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஜனநாயகம் குறித்து பேசும் அனைவரும் கைது செய்யப்படுவர்.
எனவே இதனை முறியடிக்க அனைத்து பிரஜைகளும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இலங்கை ஜனநாயக நாடு எனக் கூறிக் கொண்டாலும் , உண்மையில் இங்கு ஜனநாயகம் இல்லை. பாராளுமன்றம் , நிறைவேற்றதிகாரம் , நிர்வாக சேவை, பொலிஸ் மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட எவையுமே இன்று நாட்டில் முறையாக செயற்படவில்லை.
பாராளுமன்றம் மற்றும் அரச நிர்வாகம் என்பன ஊழல் மோசடிகளால் நிரம்பியுள்ளன. உலகில் மிக மோசமான பொலிஸ் இலங்கையில் காணப்படுவதாக ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது கூறப்படுகின்ற உத்தேச 'புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம்' மிகவும் அச்சுறுத்தல் மிக்கதாகும். இதனை எதிர்ப்பதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும்.
குறித்த சட்ட மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இன்று பேசிக் கொண்டிருப்பதைப் போன்று கருத்துக்களை வெளியிடுவதற்கான ஜனநாயகம் காணப்படாது.
ஜனநாயகம் குறித்து பேசும் அனைவரும் கைது செய்யப்படக் கூடும். அதற்கு எதிரான போராட்டங்களை தற்போதிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.
ஆர்ப்பாட்டங்களின் மூலம் கேட்பதைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை கடந்த ஆண்டு முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்களின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே இதற்கு எதிராகவும் அவ்வாறான போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றார்.