இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் உள்நாட்டு பேக்கரி உற்பத்திகளுக்கு பொருத்தமற்றது என கோழி பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் 55 கிராம் முதல் 70 கிராம் வரையில் நிறையுடைய அதேவேளை தற்போது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் 45 கிராம் நிறையுடையனவாகும்.
இவற்றுள் தேன் போன்ற வாசனை வீசுகிறது. மேலும் குறித்த முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு பல நாட்கள் கடந்துள்ள நிலையில் அவற்றுள் 50 வீதமானவை பழுதடைந்துள்ளன.
அரசாங்கமானது கோழி பண்ணை உற்பத்திகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குமாயின் வெளிநாடுகளிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் வேண்டிய தேவை ஏற்படாது.
முன்னதாக முட்டை விற்பனை தொடர்பில் கட்டுப்பாட்டு விலை அறிவித்து வர்த்தமானி வெளியிடப்படவில்லை எனின் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை 30 முதல் 35 ரூபாய் வரையில் விற்பனை செய்திருக்கலாம்.
இதேவேளை நாட்டில் முட்டைகள் சந்தைகளில் காணப்பட்ட போதிலும் வர்த்தகர்கள் அவற்றை போதைப் பொருட்கள் விற்பனை செய்வது போன்று குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் விற்பனை செய்கிறார்கள்.
நாட்டில் முட்டை தட்டுப்பாடு காணப்படுவதாக கூறி மக்களை ஏமாற்றும் வர்த்தக அமைச்சர் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்றார்.