காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா நேற்று (09) மாலை வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா ஏ9 வீதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2210வது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி தாய்மாரால் சுழற்சி முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் குறித்த போராட்டம் அப் பகுதியில் கொட்டகை அமைத்து நடைபெற்று வருகின்றது.
குறித்த கொட்டகை அமைந்துள்ள வீதி மின் கம்பத்தில் பொருந்தப்பட்டிருந்த மின் விளக்கு இணைப்பு மூலம் மின்சாரம் பெறப்பட்டு போராட்ட கொட்டகைக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொழும்பில் இருந்து வந்த மின்சார சபையினர் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாக தெரிவித்து குறித்த போராட்ட கொட்டகையில் இருந்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா அவர்களுக்கு எதிராக பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்த வவுனியா பொலிஸார் அவரை கைது செய்து பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் தடுத்து வைத்துள்ளதுடன், நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, வடக்கு மாகாண சபை இயங்கிய காலத்தில் மின்சார சபையின் அனுமதியுடனேயே தாம் மின்சாரத்தை பெற்றதாகவும், திருத்த வேலைகளும் மின்சார சபையாலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தாம் சட்டவிரேதமாக மின்சாரம் பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.