கோட்டை ரயில் நிலையத்தில், மட்டக்களப்பு ரயில் கழிவறையில் சிசுவொன்றை கைவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
அந்த சிசுவை கைவிட்டுச் சென்ற பெற்றோர் நேற்று பண்டாரவளை மற்றும் கொஸ்லாந்தையில் கைது செய்யப்பட்டனர்.
கைதான பெண் பண்டாரவளை தலைமையக பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்படும் நேரம் காணொளி பதிவு செய்யப்பட்டமையும் சர்ச்சையாகியுள்ளது.
இதனூடாக பண்டாரவளை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் ஒருவரை விசாரணை செய்யும் போது அவரது தனியுரிமை மீறப்பட்டு சங்கடத்துக்கு உள்ளாக்கப்பட்டமை, பெண்கள் பொலிஸ் நிலையத்தில் நடத்தப்பட வேண்டிய முறைமை மீறப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்த பொலிஸ் பரிசோதகர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன
இந்நிலையில், பிரதான பொலிஸ் பரிசோதகரிடம் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினால் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் கழிவறையினுள் சிசுவொன்றை விட்டுச் சென்ற பெண்ணை பண்டாரவளை தலைமையக பொலிஸார் கைது செய்யும் போது பொலிஸ்மா அதிபரினால் வௌியிடப்பட்ட சுற்றறிக்கையை பின்பற்றாத காரணத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணை கைது செய்த போதும், சந்தேக நபரிடம் விசாரணை நடத்திய போதும், விசாரணையின் விபரங்களை கருத்திற் கொள்ளாமலும் சந்தேக நபரான பெண்ணை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியதாக பண்டாரவளை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பில் எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் பரிசோதகர் செயற்பட தவறியதன் காரணமாக உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு பொலிஸ் தலைமையகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.