(நா.தனுஜா)
இலங்கையில் கடந்த 2021ம் ஆண்டில் 12.2 சதவீதமாக காணப்பட்ட எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை, கடந்த 2022ம் ஆண்டு 15.3 சதவீதமாக அதிகரித்திருப்பதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேபோன்று தமது பிள்ளைகளுக்கு அவசியமான உணவை வழங்குவதில் பெருமளவான குடும்பங்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்ததுடன், பொதுப் போக்குவரத்து சேவை குறைபாட்டின் விளைவாக சிறுவர்களால் பாடசாலைகளுக்குச் செல்லமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் 'சிறுவர் தொழிலாளர்' எண்ணிக்கை அதிகரிப்புக்கு வழிவகுப்பதுடன், சிறுவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது என்றும் இவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டுக்கான தெற்காசிய நாடுகளின் பொருளாதார மற்றும் மனிதாபிமான நிலைவரம் தொடர்பான அறிக்கையிலேயே யுனிசெப் அமைப்பு மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் நிலைவரம் குறித்து அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
இலங்கையில் கடந்த 2022 ஜுலை மாதம் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 664,704 கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியிருந்ததுடன், 16,535 கொவிட் மரணங்களும் இடம்பெற்றிருந்தன.
அதேபோன்று 14.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் முதலாம், இரண்டாம் கட்டத் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதுடன், 8 மில்லியன் மக்கள் மூன்றாம் கட்டத் தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டனர்.
அதனை தொடர்ந்து இலங்கையில் கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி பூதாகரமான பிரச்சினையாக மாறத் தொடங்கியது.
அத்துடன், அது நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மீதும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக, 2021ஆம் ஆண்டில் 12.2 சதவீதமாகக் காணப்பட்ட எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 15.3 சதவீதமாக அதிகரித்தது. தமது பிள்ளைகளுக்கு அவசியமான உணவை வழங்குவதில் பெருமளவான குடும்பங்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்ததுடன், பொதுப் போக்குவரத்து சேவை குறைபாட்டின் விளைவாக சிறுவர்களால் பாடசாலைகளுக்குச் செல்லமுடியாத நிலையேற்பட்டது.
அதுமாத்திரமன்றி, கடதாசிக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டின் காரணமாக பரீட்சைகள் கல்வி அமைச்சினால் பிற்போடப்பட்டன. இவ்வாறான நடவடிக்கைகள் சிறுவர்கள் 'சிறுவர் தொழிலாளராக' மாறுவதற்கு வழிகோலியதுடன், அவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குட்படுத்தியது.
இவ்வாறானதொரு பின்னணியில் பொருளாதார நெருக்கடியின் விளைவாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கைகொடுக்கும் நோக்கில் சுகாதாரம், போசணை, சிறுவர் பாதுகாப்பு, கல்வி, சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் சார்ந்து உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்கென எம்மால் பல்வேறு செயற்றிட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
கடந்த 2022ஆம் ஆண்டு 750,000 சிறுவர்கள் உள்ளடங்கலாக 1.3 மில்லியன் மக்களுக்கு அவசியமான மனிதாபிமான உதவிகள் யுனிசெப் அமைப்பினால் வழங்கப்பட்டன.
யுனிசெப் அமைப்பின் தலையீட்டின் ஊடாக நகர்ப்புறங்களில் வசிக்கும் சுமார் 800,000க்கும் அதிகமான மக்கள் தூய குடிநீர் வசதியை பெற்றிருப்பதுடன், பின்தங்கிய மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் 285,403 சிறுவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு அவசியமான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோன்று பாடசாலை மற்றும் சமூக மட்டத்தில் வழங்கப்பட்ட உளவியல் ஆலோசனை சேவையின் ஊடாக 205,000 பேரும், கடந்த ஆண்டு கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த தாய்மாருக்கு 3 மாதகாலத்துக்கு வழங்கப்பட்ட நிதியுதவி மூலம் 3010 பேர் பயனடைந்துள்ளனர். இவ்வாண்டில் அந்த நிதியுதவி மேலும் 110,000 தாய்மாரை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியினால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள 1.7 மில்லியன் சிறுவர்கள் உள்ளடங்கலாக 2.8 மில்லியன் பேருக்கு அவசியமான உயிர் காக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கென 25 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க முன்வருமாறு கடந்த ஆண்டு யுனிசெப் அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
இருப்பினும், யுனிசெப் அமைப்புக்கு 34 மில்லியன் டொலர் நிதியுதவி கிடைக்கப்பெற்றது. ஆனால், போசணை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் கோரப்பட்டதை விடவும் அதிகளவிலான நிதி கிடைக்கப்பெற்ற போதிலும் கல்வி, சிறுவர் பாதுகாப்பு போன்ற துறைகளுக்கு கிடைக்கப்பெற்ற நிதி போதுமானதல்ல. எனவே, இத்துறைகளுக்கு இவ்வருடம் மேலதிக நிதியளிப்பு அவசியமாகிறது.
மேலும், குறிப்பாக கடந்த 2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவிலே நாட்டின் மொத்த சனத்தொகையில் 28 சதவீதமானோர், அதாவது 6.2 மில்லியன் பேர் ஓரளவு உணவுப் பாதுகாப்பின்மைக்கும் 66,000 பேர் தீவிர உணவுப் பாதுகாப்பின்மைக்கும் முகங்கொடுத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.