அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை அல்-ஹிக்மா பாடசாலையில் தரம் 09ல் கற்கும் ஐ. அப்துல் ஹாதிக் எனும் மாணவனே இவ்வாறு ஆசியரால் தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு தொடர்பாக மாணவனின் வாக்குமூலம் அடங்கிய வீடியோ பதிவுடன் கூடிய செய்தியை கடந்த 09.03.2023 அன்று ShortNews செய்தித் தளமும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
குறித்த செய்தி தொடர்பிலான தன் பக்க நியாயத்தை சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் ShortNews செய்தித் தளத்திற்கு அனுப்பியுள்ளார். அதனை இங்கு பிரசுரிக்கிறோம்.
--------------------------------
பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்திற்கும் அங்கு கற்பிக்கும் ஆசிரியருக்கும் அதிபருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யாக சோடிக்கப்பட்டு பரப்பப்படும் செய்தியின் உண்மைத்தன்மை
கடந்த 24. 2. 2023ம் திகதி மாணவர் ஒருவருக்கு அடித்து காலை உடைத்ததாக பரப்பப்படும் செய்தியானது அபாண்டமாக சோடிக்கப்பட்டு இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.
ஏற்கனவே நான்கு வருடங்களுக்கு முன்பு குறிப்பிட்ட மாணவனின் குடும்பத்தினருக்கும் பாடசாலை நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட பகைமை உணர்வு காரணமாக பாடசாலை சமூகத்தை பழிவாங்கும் நோக்கில் பகடை காயாய் என்னை பயன்படுத்துகின்ற சந்தர்ப்பமே இதுவாகும்.
உண்மையிலேயே அந்த மாணவனுக்கு நான் அடிக்கவே இல்லை. இந்த விடயம் தொடர்பாக குறிப்பிட்ட தினமே அக்கரைப்பற்று போலீஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த முறைப்பாட்டிலும் குறிப்பிட்ட மாணவன் ஆசிரியர் அடித்ததாக குறிப்பிடவில்லை. அதேபோன்று வைத்தியசாலையிலும் ஆசிரியர் அடித்ததற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை. இதற்கான எக்ஸ்ரே அறிக்கை மற்றும் ஏனைய அறிக்கைகளும் ஆதாரமாக இருக்கின்றன.
இவற்றையெல்லாம் நீங்கள் குறிப்பிட்ட போலீஸ் நிலையத்திலும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் பெறுவதன் மூலம் சரியான உண்மைத் தன்மையினை ஆதாரப்பூர்வமாக பெற்றுக்கொள்ளலாம்.
இந்தப் பொய் தகவலை எதிர்த்து அனைத்து ஊர் மக்கள், பாடசாலை மாணவர்கள், பள்ளிவாசல் பரிபாலன சபையினர், கழகங்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர், பாடசாலை பழைய மாணவர்கள் போன்ற அனைவரும் இந்த பொய்க் கூட்டத்தினருக்கு எதிராக போர் கொடி தூக்கி, எனக்கும் அதிபருக்கும் ஆதரவாக தொடர்ச்சியாக இருந்து வருகிறார்கள்.
இவ்வாறு இருக்கையில் இந்த செய்தியின் உண்மை தன்மையினை அறியாத ஊடகங்கள் எந்த விசாரணைகளையும் சம்பந்தப்பட்டவர்களிடம் அறிந்து கொள்ளாமல் ஒரு பக்கச் சார்பாக சோடிக்கப்பட்ட நாடகத்தை அரங்கேற்றுகின்ற அந்த குழுவினருக்கு மாத்திரம் சார்பாக இருந்து இந்த செய்திகளை பரப்புவது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.
எனவே நான் யாரிடமும் முறையிடவில்லை. வல்ல அல்லாஹ்விடமே இந்த விடயத்தை ஒப்படைத்து இருக்கிறேன். அவனே இதற்கு பொறுப்பானவன். அவனே இதற்கு போதுமானவன்.