யாழ்ப்பாணம் – கீரிமலை சிவன் ஆலயம் முழுமையாக இடித்து, அழிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தினக்குரல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள கீரிமலை கிருஸ்ணன் ஆலயத்தின் நிர்வாகத்தினர் சிலரை, கடற்படையினர் கடந்த வெள்ளிகிழமை பாதுகாப்பு வலயத்திற்குள் அழைத்து சென்றுள்ளனர்.
இதையடுத்து, சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு, அங்கு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பகுதியை இராணுவத்தினர் 1990ம் ஆண்டு முதல் ஆக்கிரமித்துள்ளனர்.
இந்த நிலையில், 32 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக கடந்த வெள்ளிகிழமை, கிருஸ்ணன் ஆலயத்தின் நிர்வாகத்தின் இந்த இடத்திற்கு சென்று விடயங்களை ஆராய்ந்துள்ளனர்.
ஆலய பரிபாலன சபையினருடன், அந்த பகுதி கிராம சேவகரும் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கீரிமலை சிவன் ஆலயத்தின் முகப்புப் பகுதி இடித்து அழிக்கப்பட்டிருந்ததை, அங்கு சென்ற ஆலய நிர்வாகத்தினர் அவதானித்துள்ளனர்;.
வரலாற்று சிறப்புமிக்க ஆதிசிவன் ஆலயம் இருந்த இடமே தெரியவில்லை என அங்கு சென்ற ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆலயம் அடியோடு அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
அத்துடன், கிருஸ்ணன் ஆலயத்தின் வசந்த மண்டபம் முழுமையாக இடித்து தள்ளப்பட்டுள்ளது.
ஆலயத்தின் எஞ்சிய சில பகுதிகளே உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, குறித்த ஆலயத்திலிருந்த பிள்ளையார், முருகன் சிலைகள் காணாமல் போயுள்ளதாகவும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
எஞ்சிய சில சிலைகள் மாத்திரமே காணப்படுவதுடன், ஆதிசிவன் ஆலயம் மற்றும் அங்கிருந்த சிவலிங்கம் ஆகியன காணாமல் போயுள்ளன.
கதிரை ஆண்டவர் ஆலயத்தை பார்க்க முடியவில்;லை எனவும், அதுவும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கதிரை ஆண்டவர் ஆலயத்திற்கு அருகில் காணப்பட்ட சடையம்மாமடம் உட்பட மடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதிக்கு சென்ற கிருஸ்ணன் ஆலயத்தின் பரிபாலன சபைத் தலைவர் கதிரவேலு நாகராசா இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
தாங்கள் பார்வையிட்ட கிருஸ்ணன் ஆலயத்தை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரிவினர் வாக்குறுதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
ஆதிசிவன் ஆலயம் முற்றாக இடித்து அழிக்கப்பட்டுள்ளமை, சைவ மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம், ட்ரூ சிலோன் வினவியது.
இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு பதிலளித்தது.
யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் பின்னணி – ஜனாதிபதி தரப்பின் பதில்
யாழ்ப்பாணம், வலி வடக்கு பிரதேசத்தில் ஜனாதிபதி மாளிகைக்கான நிர்மாணப் பணிகள் 2013 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகள் 2015 இல் ஆட்சி மாற்றத்துடன் இடைநிறுத்தப்பட்டதாக வடக்கு மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் திசானாயக்க தெரிவித்தார்.
29 ஏக்கர் முழு நிலப்பகுதியில் ஒரு பகுதியிலே மாளிகை அமைந்துள்ளதோடு மாளிகை நிர்மாணிக்கப்பட்ட பின்னர் கடற்படை அங்கு பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்த மாளிகை மற்றும் கோவில் உள்ள பிரதேசம் 2022 இல் உத்தியோகபூர்வமாக இந்தப் பிரதேசம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தினக்குரல் பத்திகை செய்தி தவறானது என்றும் இது தவறான புரிதலை ஏற்படுத்துவதாகவும் கோவில் அழிக்கப்பட்டு மாளிகை கட்டப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவித்த தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி, சிவன் கோவில் ஒன்று அங்கிருந்ததாகவும் அண்மையில் கிருஷ்ணன் கோவில் நிர்வாகிகள் அந்த கோவில் இருந்த பகுதிக்கு கடற்படையினருடன் சென்றதாகவும் தெரிவித்தார்.
சிவன் கோவில் இருந்த இடத்தில் அன்றி அதற்கு அருகிலே ஜனாதிபதி மாளிகை நிர்மாணிக்கப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தினார். 1990 வரை சிவன் கோவிலில் பூஜை இடம்பெற்றதாகவும் எக்காலப்பகுதியில் கோவில் உடைந்தது என்ற தகவல் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனியாருக்கு சொந்தமான காணி சுவீகரிக்கப்பட்டு அந்த இடத்திலே ஜனாதிபதி மாளிகை கட்டப்பட்டுள்ளதாகவும் கோவில் காணி அதற்கு பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் கோவிலின் பல பகுதிகள் சேதமடைந்து, கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் அங்கிருப்பதாக கிருஷ்ணன் கோவில் பரிபாலன சபை உறுப்பினர்கள் தெரிவித்தார்கள்.
கிருஷணன் கோவிலின் சில பகுதிகளும் சேதமாகியுள்ளதாகவும் தெரிவித்த அவர், மாளிகை உட்பட சுற்றியுள்ள முழுமையான காணி நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழே கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
வடபகுதிக்குப் பொறுப்பான கடற்படை கட்டளைத்தளபதி அட்மிரல் அருண தென்னகோன் இது தொடர்பில் தெளிவுபடுத்துகையில், மாளிகையின் சொத்துக்களின் பாதுகாப்பிற்காக கடற்படை அங்கு இருப்பதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழே இந்த பிரதேசம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
கடற்படை பிரதான தளமும் இதற்கு அருகிலே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ். இராணுவக்கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சொர்ண போதொட்ட குறிப்பிடுகையில், குறித்த பிரதேசத்தில் ஜனாதிபதி மாளிகைக்கான தேவையொன்று இல்லை என்பதை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் மேற்கொண்ட யாழ்ப்பாண விஜயத்தின்போது குறிப்பிட்டிருந்தார்
இந்த மாளிகை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிறந்த தரத்திலான ஹோட்டல் ஒன்றாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் யோசனை முன்வைத்திருந்தார்.
யாழ்ப்பாணம் முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் இந்த பிரதேசம் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இராணுவம் அங்கு எந்த வித நிர்மாணங்களை மேற்கொள்ளவோ அழிக்கவோ இல்லை என்றும் குறிப்பிட்டார்.