வசந்த முதலிகேவை விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் சமர்பித்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் வசந்த முதலிகேவை விடுவிப்பதற்கான தீர்மானத்திற்கு எதிராக சட்டமா அதிபர் இந்த மேன்முறையீட்டை தாக்கல் செய்திருந்தார்.
இதன்படி, குறித்த மேன்முறையீட்டில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள வசந்த முதலிகேவை அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்குமாறும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகேவை போதிய சாட்சியங்கள் இல்லை எனக் கூறி விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு சட்டத்திற்கு முரணானது எனவும், அதனை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரியும் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.