(எம்.எம்.சில்வெஸ்டர்)
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தற்போது சிரேஷ்ட பொலிஸ் மா அதிபராகவுள்ள தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டால், அதனை தாம் எதிர்ப்பதாகவும், அது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல எனவும் கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்தின் ஊடக பேச்சாளர் சிறில் காமினி தெரிவித்தார்.
வெறுமனே அரசியல்வாதிகளை மாத்திரம் பாதுகாக்காமல், மக்களுக்கான பாதுகாப்பை வழங்கங்கூடியவராகவும், நாட்டில் அமைதி மற்றும் சமாதானத்தை நிலைநாட்டி, நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய ஒருவரே பொலிஸ் மா அதிபாராக வர வேண்டும். இவற்றை தனது கடந்த கால பொலிஸ் சேவையில் செயற்படுத்திக்காட்டியுள்ள ஒருவரே பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட வேண்டும். பொலிஸ் உத்தியோகத்தர்களை சரியா வழியில் நியாயமான முறையில் நடத்தக்கூடிய மக்கள் நம்பிக்கையை பெற்றிருக்க வேண்டும் என அருட் தந்தை மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பு பேராயர் இல்லத்தில் வியாழக்கிழமை (09) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
"உயிர்த்த தின ஞாயிறு குண்டுத் தாக்குல் சம்பவத்தை தடுப்பதற்கு அதிகப்படியான சந்தர்ப்பங்கள் இருந்தும், தங்களது கடமைகளையும் பொறுப்புக்களையும் தட்டிக்கழித்து இந்த மிலேச்சத்தனமான சம்பவத்திற்கு வழிவகுத்த அரச உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், உண்மைகளை மறைத்து, அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்றவாறு வேலைகள் செய்கின்ற பொலிஸ் அதிகாரிகள், உயர் பதவிகளை பெறுவதற்காக எடுக்கின்ற முயற்சிகள் குறித்து நாம் அறிவோம். அவலட்சனத்தனமான மற்றும் மோசடிமிக்க முயற்சிகள் தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கீழ்மட்ட அதிகாரிகள் மற்றும் பொது மக்களும் அறிந்துகொள்ள வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்காக 9 கோடியே 13 இலட்சத்து 69 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பணம் செலவிடப்பட்டது. இவ்வாறு பெருந்தொகையான மக்கள் பணத்தை செலவிட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின்போது கொழும்பு வடக்குக்கு அப்போது பொறுப்பாகவிருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோன், பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார, கட்டான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த நவரத்ன ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளபோதிலும் இதுவரையிலும் அதற்கு எதிராக இலங்கை பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றது.
இவ்விடயம் குறித்து , மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையினால் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியிருந்தபோதிலும், அக்கடிதம் கிடைத்தது என்றுகூட பதில் கடிதம் அனுப்பாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்" என்றார்.