இலங்கையின் யுத்த குற்றத்துடன் தொடர்புடைய நபர்களை நல்லிணக்கம் மற்றும் நிலைமாற்றுக்கால நீதி அறிந்துகொள்வதற்காக தென்னாபிரிக்க அரசாங்கம் அழைத்துள்ளமை குறித்து அந்த நாட்டின் மனித உரிமை அமைப்புகள் கூட்டாக கேள்வி எழுப்பியுள்ளன.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இதனை தெரிவித்துள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பிற்கான அமைச்சர் நலெடி பன்டுரின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர் என அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்கஅனுபவங்களை கற்றுக்கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தெரிவிக்கப்பட்ட நோக்கங்கள் உயர்வானவை என்ற போதிலும் தொடரும் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் சிவில் சமூகம் ஒடுக்கப்படுவது மற்றும் 1983 முதல் 2009 வரையான உள்நாட்டு போரின் போது இழைக்கப்பட்ட மோசமான மனித உரிமை மீறல்களிற்கு குற்றவியல் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தவறியது இலங்கை அதிகாரிகளிற்கான தென்னாபிரிக்காவின் அழைப்பு கரிசனையளிக்கின்றது எனவும் தென்னாபிரிக்காவின் மனித உரிமை அமைப்புகள் கூட்டாக தெரிவித்துள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளில் சில பாரதூரமான மனித குலத்திற்கு எதிரான மற்றும் யுத்த குற்றஙகள் போன்ற பாரிய மனித உரிமை மீறல்களாக இருக்கலாம் என ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது எனவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் குறுகிய பகுதிக்குள் குறுகிய காலத்தில் 40,000 முதல் 70,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என ஐநா மதிப்பிட்டுள்ளது.
தென்னாபிரிக்காவிற்கு அழைக்கப்பட்டுள்ள இரண்டு அதிகாரிகளும் பார}தூரமான சர்வதேச குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நெருக்கமானவர்கள் என தெரிவித்துள்ள தென்னாபிரிக்காவின் மனித உரிமை அமைப்புகள் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் பாரதூரமான சர்வதேச குற்றங்கள் தொடர்பில் சமீபத்தில் சிங்கப்பூரில் சர்வதேச நியாயாதிக்த்தின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ளன.
2019 இல் ராஜபக்சவிற்கு எதிராக வேறு ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதையும் தென்னாபிரிக்காவின் மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
கோட்டாபய ராஜபக்ச தான் ஆட்சியில் இருந்த காலத்தில் தனது சகாக்கள் சிலரை உயர்பதவிகளில் நியமித்தார்.
இவர்களில் சிலருக்கு எதிராக பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காக அமெரிக்கா கனடா போன்ற நாடுகள் தடைகளை விதித்துள்ளன.
வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட சட்டத்தரணி அவருக்காக பல ஊழல் வழக்குகளில் ஆஜரானார் வெளிவிவகார அமைச்சராவதற்கு முன்னர் அவர் நீதியமைச்சராக பதவி வகித்தார் அந்த காலத்தில் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் கோட்டாபய ராஜபக்ச எனவும் தென்னாபிரிக்க மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.