Our Feeds


Saturday, March 25, 2023

ShortNews Admin

புதிய உலக சாதனை படைத்தார் ரொனால்டோ!



17-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி (யூரோ சாம்பியன்ஷிப்) ஜெர்மனில் அடுத்த ஆண்டு (2024) ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடக்கின்றது. 


போட்டியை நடத்தும் நாடான ஜெர்மன் தவிர எஞ்சிய 23 அணிகள் தகுதி சுற்று மூலம் இந்த போட்டிக்கு தகுதி காணும். ஐரோப்பிய கால்பந்து போட்டியின் தகுதி சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் பல்வேறு நாடுகளில் தொடங்கியது. 


இதில் பங்கேற்றுள்ள 53 அணிகள் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 7 பிரிவுகளில் தலா 5 அணிகளும், 3 பிரிவுகளில் தலா 6 அணிகளும் இடம் பெற்றுள்ளன. 


ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம் பிடித்துள்ள மற்ற அணிகளுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் 2 முறை லீக்கில் மோத வேண்டும். 


லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும்.


'ஜெ' பிரிவில் இடம் பெற்றுள்ள போர்ச்சுகல் அணி தலைநகர் லிஸ்பனில் நடந்த தனது முதலாவது லீக் ஆட்டத்தில் லீக்டன்ஸ்டைன் அணியை எதிர்கொண்டது. 


இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய போர்ச்சுகல் அணி 4-0 என்ற கோல் கணக்கில் லீக்டன்ஸ்டைனை பந்தாடியது. போர்ச்சுகல் அணி தரப்பில் கான்செலோ 9-வது நிமிடத்திலும், பெர்னார்டோ சில்வா 47-வது நிமிடத்திலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 51-வது மற்றும் 63-வது நிமிடங்களிலும் கோல் அடித்தனர்.


போர்ச்சுகல் அணியின் கேப்டனும், முன்கள வீரருமான 38 வயது ரொனால்டோவுக்கு இது 197-வது சர்வதேச போட்டியாகும். சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரொனால்டோ இந்த ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் அவரது சர்வதேச கோல் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்தது.


அத்துடன் இந்த போட்டியில் களம் இறங்கியதன் மூலம் ரொனால்டோ அதிக சர்வதேச கால்பந்து போட்டியில் (197 ஆட்டம்) விளையாடிய வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். 


இதற்கு முன்பு குவைத் வீரர் பாடர் அல் முடாவா 196 சர்வதேச போட்டியில் ஆடியதே சாதனையாக இருந்தது. அதனை ரொனால்டோ தகர்த்து புதிய வரலாறு படைத்தார். இதேபோல் இத்தாலியில் நடந்த 'சி' பிரிவு ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வென்றது. 


இங்கிலாந்து தரப்பில் டெகான் ரைஸ், கேப்டன் ஹாரி கேன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். 


44-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்ததன் மூலம் ஹாரி கேன் சர்வதேச போட்டியில் அதிக கோல்கள் (54 கோல்கள்) அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை முன்னாள் வீரர் வெய்ன் ரூனியிடம் (53 கோல்கள்) இருந்து தட்டிப்பறித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »