உங்கள் உடலில் புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்பட்டால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இலங்கையில் அண்மைக் காலமாக தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவசரமாக சுகாதார ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் வருடாந்தம் சுமார் 1,500 தொழுநோயாளிகள் இனங்காணப்படுவதாகவும் அவர்களில் 15% நோயாளிகள் குழந்தைகள் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, உங்களின் உடலில் அடையாளங்கள் இருப்பது தொடர்பில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், தேசிய வைத்தியசாலையின் மத்திய தொழுநோய் சிகிச்சை நிலையத்தின் 075 4088604 என்ற இலக்கத்திற்கு whatsapp செய்தியை அனுப்புமாறு அந்த அறிக்கையின் ஊடாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அந்த செய்தியில், நன்கு வெளிச்சம் உள்ள இடத்தில் எடுக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான இடத்தின் தெளிவான புகைப்படம், வயது, பாலினம், நீங்கள் வசிக்கும் இடம், எவ்வளவு காலம் அந்த புள்ளி அல்லது அடையாளம் உள்ளது எனவும், மற்றும் பிற தொடர்புடைய அறிகுறிகள் (அரிப்பு, எரிச்சல், வலி) தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.