பேருவளை பகுதியைச் சேர்ந்த 25 வயதான யுவதி ஒருவர் கடந்த முதலாம் திகதி நள்ளிரவில் வீட்டிலிருந்து வெளியேறி காணாமல் போயிருந்த நிலையில், இன்று அதிகாலை பேருவளை கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி கடந்த முதலாம் திகதி நள்ளிரவில் இருந்து காணாமல் போயிருந்த நிலையில், அவரை தேடும் பணியில் பேருவளை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் கடந்த மூன்று தினங்களாக ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில் நேற்று பிற்பகல் பேருவளை ஆழ்கடலில் பெண் சடலம் ஒன்று மிதப்பதாக மீனவர்கள் தெரிவித்ததையடுத்து பேருவளை மருதானை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் ஆழ் கடலுக்குச் சென்று பல மணித்தியாலங்கள் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போதும். நேற்று சடலம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் இன்று அதிகாலை பேருவளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்கடலில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று மிதப்பதாக மீண்டும் மீனவர்கள் அறிவித்ததை அடுத்து பேருவளை மருதானை மீன்பிடி துறைமுகத்திலிருந்து சில மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று குறித்த சடலத்தை கரைக்கு கொண்டுவந்தனர்.
காணாமல் போயிருந்த யுவதியின் தந்தை இது தனது மகள் என உறுதிப்படுத்தினார்.
அதன் பின்னர் மரண விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி பர்ஸான் முன்னெடுத்ததுடன் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த யுவதிக்கு கடந்த பல வருடங்களாக அவ்வப்போது மனநலம் பாதிக்கப்படுவதாகவும், அதற்காக பல ஆண்டுகளாக சிகிச்சைகளை மேற்கொண்டு வந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.