Our Feeds


Friday, March 24, 2023

ShortNews Admin

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி - காரணத்தைக் கூறினார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்



(எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்)

தேசிய பாதுகாப்பு மற்றும் விமான படையின் கௌரவம் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்து தெரிவித்த காரணத்தால் ஓய்வு பெற்ற விமான படை அதிகாரி சம்பத் துய்யகொன்ன கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டார், இவ்விடயத்தில் எவ்வித அரசியல் தலையீடும்,அரசியல் பழிவாங்களும் கிடையாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் வெள்ளிக்கிழமை (24) இடம் பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஓய்வுப் பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்ன கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதன் பின்னணி என்ன என்று முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள்,விமான படை அதிகாரிகள் உட்பட முப்படை அதிகாரிகள் பதவியில் இருக்கும் போது  தேர்தலில் வாக்களிப்பதை தவிர செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபட அனுமதி வழங்கப்படாது.சேவையில் இருந்து ஓய்வுப்பெற்றதன் பின்னர் அவர்கள் தாராளமாக செயற்பாட்டு ரீதியிலான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடலாம்.

ஓய்வுப் பெற்ற விமான படை அதிகாரி சம்பத் துய்யகொன்ன தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் என்பதால் அவரை கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் குறிப்பிடுவது அடிப்படையற்றது.

சம்பத் துய்யகொள்ள அண்மையில் கம்பஹா பகுதியில் இடம்பெற்ற அரசியல் கட்சி கூட்டத்தில் தேசிய பாதுகாப்புக்கும்,விமான படையின் கௌரவத்திற்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

இவர் குறிப்பிட்ட கருத்துக்கள் தொடர்பில் விமானப்படை நிர்வாக மட்டத்தில் விசேட அவதானம் செலுத்தி அவருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது,இதனை தொடர்ந்தே அவர் கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்,இவ்விடயத்தில் எவ்வித அரசியல் தலையீடும்,அரசியல் பழிவாங்களும் கிடையாது.

விமானப்படையின் கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை குறிப்பிடும் நபரை அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்பது அவசியமற்றது,யாரை விமான முகாமிற்குள்,அனுமதிக்க வேண்டும்,யாருக்கு தடை விதிக்க வேண்டும் என்பதை  விமானப்படை தீர்மானிக்கும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »