வடகொரியாவின் அரசாங்க பத்திரிக்கையான Rodong Sinmun நேற்று வெளியிட்ட செய்தியில், சுமார் 800,000 வடகொரியர்கள் அந்நாட்டு இராணுவத்தில் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக போரிட முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை மாத்திரம் நாடு முழுவதும் 800,000 மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இராணுவத்தில் இணைவதற்காக முன்வந்ததாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நமது பொன்னான சோசலிச நாட்டை இல்லாதொழிக்க முயலும் போர் வெறியர்களை இரக்கமின்றி அழித்தொழிக்க வேண்டும் என்ற இளைய தலைமுறையினரின் தளராத விருப்பத்தின் நிரூபணமாக இளைஞர்கள் இராணுவத்தில் சேருவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
தேசிய மறு ஒருங்கிணைப்பு என்ற மாபெரும் இலக்கை தவறாமல் அடைய முன்வருவது அவர்களின் கடுமையான தேசபக்தியின் தெளிவான வெளிப்பாடாகும்ரூசனஙரழ் என்று Rodong Xinmun பத்திரிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
தென் கொரிய மற்றும் அமெரிக்கப் படைகள் கடந்த திங்கட்கிழமை 'ஃப்ரீடம் ஷீல்ட் 23' என்ற 11 நாள் கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்தன.
இதற்குப் பதிலடியாக வட கொரியா கடந்த வியாழனன்று அதன் Hwasong-17 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) ஏவியது.
அணு ஆயுதங்களை தன்னகத்தே கொண்ட வடகொரியாவை எதிர்ப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பதற்கான உச்சிமாநாட்டிற்காக தென் கொரிய ஜனாதிபதி டோக்கியோ செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே வட கொரியா இந்த பரிசோதனையை நடத்தியுள்ளது.
இருப்பினும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு ஆணையகத்தின் தீர்மானங்களின்படி வட கொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில், வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனை சியோல், வாஷிங்டன் மற்றும் டோக்கியோ அரசாங்கங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.