இம்ரான்கான் மீது ஊழல், தேச துரோகம், பயங்கரவாதம் உட்பட பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லாகூர், பாகிஸ்தானின் இம்ரான்கானின் தலைமையிலான அரசாங்க கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கவிழ்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.
தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வரும் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பாகிஸ்தானில் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறி தனது ஆதரவாளர்களுடன் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
அதேவேளை, இம்ரான்கான் மீது ஊழல், தேச துரோகம், பயங்கரவாதம், பொலிஸாருக்கும் மிரட்டல் விடுத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனிடையே, பிரதமர் பதவியில் இருந்தபோது வெளிநாட்டு தலைவர்கள் அளித்த பரிசுப்பொருட்களை சட்டவிரோதமாக விற்று அதிக அளவில் லாபம் சம்பாதித்ததாகவும், இது தொடர்பாக வருமான கணக்கை தாக்கல் செய்யவில்லை என இம்ரான்கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இம்ரான்கானை கைது செய்ய கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் கடந்த 18-ம் திகதி அவரது இல்லத்தில் பொலிஸார் குவிந்தனர்.
ஆனால், இம்ரான்கானை கைது செய்யவிடாமல் அவரது ஆதரவாளர்கள் லாகூரில் உள்ள அவரது இல்லம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், இம்ரான்கானை கைது செய்யும் போலீசாரின் முயற்சி தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் இம்ரான்கானுக்கு இடைக்கால பிணை வழங்கப்பட்டது.
இந்த வழக்கு வரும் 30-ம் திகதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், இம்ரான்கான் மீது தேச துரோகம், பயங்கரவாதம் உட்பட பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 7 வழக்குகளில் இடைக்கால பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஊழல் வழக்கில் கடந்த 18-ம் திகதி லாகூர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது இம்ரான்கான் ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்கு இடையே நீதிமன்ற வளாகத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக இம்ரான்கான் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த 7 வழக்குகளும் இன்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை நீதிபதிகள் இந்த 7 வழக்கிலும் இம்ரான்கானுக்கு இடைக்கால பிணை வழங்க உத்தரவிட்டனர்.