வலப்பனை கீர்த்திபண்டாரபுர பொலிஸ் பிரதேசத்தில் புதையல் தோண்ட வருகை தந்த பிக்கு ஒருவர் உள்ளிட்ட 7 பேரை கீர்த்திபண்டாரபுர பொலிஸார் நேற்று (25) மாலை கைது செய்துள்ளனர்.
கேகாலை பிரதேசத்தில் இருந்து வருகைதந்த பிக்கு ஒருவர், காலி பிரதேசத்திலிருந்து வருகை தந்த பெண் ஒருவர், மீரிகமை பிரதேசத்திலிருந்து வருகைதந்த ஆண் ஒருவர் தம்புள்ளை-பக்கமுன பிரதேசத்திலிருந்து வருகைதந்த ஒருவர் மற்றும் வலப்பனை கீர்த்தி பண்டாரபுர பகுதியை சேர்ந்த மூவர் அடங்களாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான நபர்களிடமிருந்து 3 புத்தர் சிலைகள், புதையல் தூண்டுவதாக பயன்படுத்த கொண்டுவந்த ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வலப்பனை கீர்த்தி பண்டாரபுர பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை சாவடிக்கு அருகில் சந்தேகத்திடமாக திரிந்த போது கீர்த்திபண்டாரபுர பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டதாக விசாரணைகளை மேற்கொள்ளும் கீர்த்திபண்டாரபுர பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேக நபர்களை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது இப்பிரதேசத்தில் புதையல் தோண்ட வருகை தந்த விடயம் தெரியவந்துள்ளது.
அத்துடன், இவர்களிடம் மேலதிக விசாரணைகளை செய்து வரும் பொலிஸார் சந்தேக நபர்களையும் கைப்பற்றிய பொருட்களையும் வலப்பனை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
ஆ.ரமேஸ்