Our Feeds


Friday, March 3, 2023

News Editor

60 ஆயிரம் முட்டைகள் பறிமுதல்!


 ஜாஎல, தண்டுகம பகுதியில் 60,000 முட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய மறைத்து வைத்திருந்த வர்த்தகர் ஒருவரின் களஞ்சியசாலைக்கு சீல் வைக்க நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் நேற்று (02) நடவடிக்கை எடுத்துள்ளனர். 


குறித்த முட்டை இருப்பு தொடர்பில் நீதிமன்றில் விடயங்களை அறிக்கையிட்டு இன்று (03) தீர்மானம் எடுக்கவுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது. 

நேற்று பிற்பகல், அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமிக்கு சொந்தமான ஜாஎல, தண்டுகம முட்டை களஞ்சியசாலைக்கு முட்டை கொள்வனவு செய்வதற்காக நுகர்வோர் சேவை அதிகார சபையின் கொழும்பு விசேட சுற்றிவளைப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் அங்கு சென்றுள்ளார். 

களஞ்சியத்தின் உரிமையாளர் என்டன் நிஷாந்த அப்புஹாமியிடம் 260 முட்டைகள் வேண்டும் என்று அதிகாரி கேட்டபோது, ​​சில்லறை விலைக்கு முட்டைகளை விற்பனை செய்வதில்லை என்றும், தேவைப்பட்டால் 10,000 முட்டைகளை வழங்கலாம் என்றும் கூறியுள்ளார். 

இந்நிலையில் நேற்று மீண்டும் களஞ்சியத்தை சோதனையிட நுகர்வோர் சேவை அதிகாரசபை அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்றிருந்தனர். 

களஞ்சியத்தை பரிசோதிக்க என்டன் நிஷாந்த அப்புஹாமி கடும் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து ஏற்பட்ட சூடான சூழ்நிலை காரணமாக நுகர்வோர் சேவை அதிகாரசபை அதிகாரிகள் ஜாஎல பொலிஸில் சென்று தமது கடமைக்கு இடையூறு விளைவித்ததாக முறைப்பாடு செய்துள்ளனர். 

வெலிசர நீதவானிடம் விடயங்களை அறிக்கை செய்ததன் பின்னர், களஞ்சியசாலையை பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அங்கிருந்து சுமார் 60,000 வெள்ளை மற்றும் சிவப்பு முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இதன்படி, அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்தமை, மறைத்து வைத்து நிபந்தனைகளுடன் விற்பனை செய்தமை போன்ற காரணங்களால் களஞ்சியசாலைக்கு சீல் வைக்க நுகர்வோர் அதிகாரசபை நேற்றிரவு நடவடிக்கை எடுத்துள்ளது. 

பல்வேறு நிறுவனங்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக 47 ரூபாய்க்கு முட்டைகளை விற்பனை செய்தமைக்கான பற்றுச் சீட்டுக்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »