(எம்.மனோசித்ரா)
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக்கொள்கையை மீளப் பெறுமாறு வலியுறுத்திய அரச மருத்து அதிகாரிகள் சங்கம் திங்கட்கிழமை (13) 4 மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
தமக்கான தீர்வுகள் கிடைக்கப் பெறாதபட்சத்தில் செவ்வாய்கிழமை முதல் ஏனைய அனைத்து மாகாணங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.
அத்தோடு எதிர்வரும் 15ஆம் திகதி புதன்கிழமை துறைமுகம் , பெற்றோலியம் , மின்சக்தி, நீர்வழங்கல், கல்வி, உயர் கல்வி, தபால், வங்கி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் சகல சேவைகளும் முடங்கும் வகையில் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளன.
வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
கடந்த வாரங்களில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு இதுவரையிலும் அரசாங்கத்தினால் உரிய பதில் வழங்கப்படவில்லை.
எனவே இனிவரும் நாட்களில் எமது போராட்டத்தினை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளோம். அதற்கமைய திங்கட்கிழமை முதல் முற்கட்டமாக 4 மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய மேல், தென், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுகாதார நிலையங்கள், வைத்தியசாலைகள் உள்ளிட்ட சகல மருத்துவ சேவை நிலையங்களில் வைத்தியர்கள், சிற்றூழியர்கள் உள்ளிட்ட அனைவரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
திங்கட்கிழமை காலை 8 மணி முதல் இம்மாகாணங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பமாகும். அரசாங்கத்தினால் ஞாயிற்றுக்கிழமையாவது ஸ்திரமான பதில் வழங்கப்பட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட முடியும்.
எவ்வாறிருப்பினும் சிறுவர் வைத்தியசாலைகள், பெண்கள் வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள், மனநல வைத்தியசாலைக், சிறுநீரக வைத்தியசாலைகள், இராணுவ வைத்தியசாலைகள் என்பவற்றில் மாத்திரம் வழமையான வைத்திய சேவைகள் முன்னெடுக்கப்படும். ஏனைய சகல வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவுகளைத் தவிர வேறு எந்தவொரு சேவையும் இடம்பெறாது.
திங்கட்கிழமை எம்மால் முன்னெடுக்கப்படும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையையும் அரசாங்கம் உதாசீனப்படுத்துமானால் வடக்கு , வடமத்திய, வடமேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
நாளையேனும் அரசாங்கத்திடமிருந்து உரிய பதில் கிடைக்குமானால் இந்த மாகாணங்களிலும் முன்னெடுக்க தீர்மானித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்த முடியும்.
மாறாக அன்றைய தினத்திலும் அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்காவிட்டால், 15ஆம் திகதி புதன்கிழமை சகல தொழிற்சங்கங்களுனும் இணைந்து நாடு முற்றாக முடங்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவோம்.
அவ்வாறு நாடு முடங்கும் பட்சத்தில் அதனால் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். புதிய வரி வசூலிப்பு திட்டத்தை அரசாங்கம் மீளப்பெறும் வரை எமது போராட்டம் கைவிடப்பட மாட்டாது.