இலங்கையின் அந்நியச்செலாவணி தற்போது அதிகரித்துள்ளதாகவும், தற்போது நடைமுறையில் உள்ள வரிக்கொள்கை மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எடுத்துள்ள தீர்மானங்களே இதற்குக் காரணம் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 4.5% அதிகரித்துள்ளதாகவும், அதற்கமைய 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இலங்கை மத்திய வங்கியிடம் இருக்கும் வெளிநாட்டு கையிருப்பானது 2,217 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இலங்கை தற்போது மிகப்பாரிய ஆலவிலான வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு கிடைத்த அந்நியச் செலாவணியின் சதவீதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2002ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் 1.6 சதவீதமாக இருந்த அந்நியச் செலாவணி 2005ஆம் ஆண்டு நிர்வாகக்காலம் முடிவடையும் போது 2.65 சதவீதமாக அதிகரித்திருந்தது.
2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை பொறுப்பேற்ற முதல் வருடத்தில் 2.73 வீதமாக இருந்த அந்நியச் செலாவணி, 2015 ஆம் ஆண்டு தனது பதவிக்காலம் முடிவடையும் போது 6.54 வீதமாக அதிகரித்திருந்தது.
கடந்த 10 வருடங்களில் அதிகூடிய அந்நியச் செலாவணியானது 2014 அம ஆண்டிலேயே பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிப்பதாகவும் அது 7.32 சதவீதம் எனவும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் வெளியிட்டுள்ள வரைபொன்று வெளிப்படுத்துகின்றது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்ற முதல் வருடமான 2016ஆம் ஆண்டு அந்நியச் செலாவணி 5.19 சதவீதமாகவும், 2020இல் 6.69 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் காலத்தில் அதாவது 2017ல் அந்நியச் செலாவணி 7.3 சதவீதமாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவரது ஆட்சியின் முதல் வருடத்தில் அதாவது 2020 இல் 5.26 வீதமாகப் பதிவான அந்நியச் செலாவணி 2022 இல் அவர் ஆட்சியை விட்டு விரட்டியடிக்கப்பட்ட போது 1.89 வீதமாகக் குறைவடைந்தது.
இந்த காலகட்டத்தில் கோட்டாபய ராஜபக் ஷவின் ஆட்சியில் எடுக்கப்பட்ட மோசமான தீர்மானங்கள், வரி கொள்கையில் காணப்பட்ட மந்தநிலை, அரசியல் ரீதியிலான தீர்மானங்கள் என்பன நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமான விதத்தில் பாதித்ததாக அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இக்காலகட்டத்தில் ஏற்பட்ட போராட்டங்கள் காரணமாக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2022 ஜூலையில் ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறியதுடன், அப்போது பாராளுமன்றத்தில் தேசிய பட்டியல் உறுப்பினராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜூலை 21 ஆம் திகதி நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.