கிரீஸில் இடம்பெற்ற பாரிய தொடரூந்து விபத்தையடுத்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் கோஸ்டாஸ் கரமன்லிஸ் பதவி விலகியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு , ஏதென்ஸில் இருந்து தெசலோனிகிக்கு வரையான பயணித்த பயணிகள் தொடரூந்துடன் சரக்கு தொடரூந்து மோதியதில் குறைந்தது 38 பேர் உயிரிழந்ததுடன், 85 பேர் காயமடைந்தனர்.
இரண்டு தொடரூந்துகளும் ஒரே பாதையில் எதிரெதிர் திசையில் பயணித்ததாக கூறப்படுகிறது.
பயணிகள் ரயிலில் இருந்தவர்களில் பலர் நீண்ட விடுமுறைக்கு பிறகு திரும்பிய மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது.
உயிர் பிழைத்தவர்கள் அந்நாட்டு ஊடகங்களுடன் பேசுகையில், மோதலின் தாக்கம் மிகவும் வலுவாக இருந்தது, அதில் பல பயணிகள் ஜன்னல்கள் வழியாக தூக்கியெறியப்பட்டனர்.
தொடரூந்து பாதையில் இருந்து 40 மீற்றர் தொலைவில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்புப் படையினர் கண்டெடுத்தனர்.
லரிசாவின் பொது மருத்துவமனையின் தலைமை பிரேத பரிசோதனை அதிகாரி ரூபினி லியோன்டாரி கூறுகையில், பலியானவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்றும் சிலரை மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காண வேண்டும் என்றும் கூறினார்.
அருகிலுள்ள நகரமான லாரிசாவில் உள்ள தொடரூந்து நிலைய அதிகர் நேற்று கைது செய்யப்பட்டார்.
காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, கடமை தவறியமை மற்றும் பொதுமக்களின் மரணங்களுக்கு காரணமானவை உள்ளிட்டமை தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், "மிகவும் அநியாயமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக” பதவி விலகுவது தனது "கடமை" என்று கரமன்லிஸ் கூறினார்.
2019 ஆம் ஆண்டு தனது அரசாங்கம் பொறுப்பேற்ற போது, 21 ஆம் நூற்றாண்டிற்குப் பொருத்தமில்லாத தொடரூந்து அமைப்பு காணப்பட்டது.
ஆனால் அதனை மேம்படுத்த தனது அமைச்சு மேற்கொண்ட முயற்சிகள் செவ்வாயன்று விபத்தைத் தடுக்க போதுமானதாக அமையவில்லை என்றும் அவர் கூறினார்.
புதன்கிழமை விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ், மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ துக்கதினத்தை அறிவித்தார்.