Our Feeds


Wednesday, March 1, 2023

SHAHNI RAMEES

அமெரிக்க அரசின் சாதனங்களிலிருந்து டிக்டொக்கை 30 நாட்களுக்குள் நீக்க வேண்டும் : வெள்ளை மாளிகை உத்தரவு...!

 

அமெரிக்க மத்திய அரச நிறுவனங்களின் அனைத்து சாதனங்களிலிருந்தும் டிக்டொக் செயலியை 30 நாட்களுக்குள் நீக்குமாறு வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. 

அமெரிக்கப் பாராளுமன்றத்தினால் டிக்டொக்குக்கு விதிக்கப்பட்ட தடைக்கு இணங்க மேற்படி உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மத்திய அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான அல்லது அரச நிறுவனங்களால் இயக்கப்படும் அனைத்து சாதனங்களிலிருந்தும் 30 நாட்களுக்குள் டிக்டொக் செயலியை நீக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதியின் நிறைவேற்று அலுவலகத்தின் முகாமைத்துவ அலுவலகப் பணிப்பாளர் ஷலாண்டா யங் திங்கட்கிழமை (27) அறிவித்துள்ளார்.

அமெரிக்க மத்திய அரசுடன் தொடர்பில்லாத வர்த்தக நிறுவனங்களுக்கும், டிக்டொக் பயன்படுத்தும் மில்லியன் கணக்கான தனிநபர்களுக்கும் இத்தடை பொருந்த மாட்டாது. 

எனினும், அமெரிக்கப் பாராளுமன்றம் அண்மையில் நிறைவேற்றிய சட்டமானது டிக்டொக்கை அந்நாட்டில் பயன்படுத்த முடியாமல் தடைசெய்துவிடும் என  அமெரிக்க சிவில் சுதந்திரங்களுக்கான ஒன்றியம் விமர்சித்துள்ளது.

எண்ணங்களையும் சிந்தனைகளையும் இந்நாட்டிம் உலகிலும் உள்ள மக்களுடன் பகிரந்துகொள்வற்கு டிக்டொக் மற்றும் ஏனைய செயலிகளை பயன்படுத்துவதற்கான உரிமை எமக்கு உள்ளது என மேற்படி ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கப் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை அங்கத்தவர்கள் டிக் டொக் பயன்படுத்துவதையும் மேற்படி சட்டம் தடை செய்துள்ளது.

கடந்த மாதம் அமெரிக்க வான் பரப்பில் சீனாவின் பலூன்கள் பறந்ததை அடுத்து, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு குறித்த கரிசனைகள் அதிகரித்துள்ளன.

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டொக் செயலியின் உளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்ற குற்றச்சாட்டில் பல நாடுகள் அதற்கு தடை விதித்துள்ளன. 

கனேடிய அரசின் சாதனங்களிலிருந்து டிக்டொக் செயலி நேற்று முதல் நீக்கப்படுவதாக கனேடிய அரசு அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஆணைக்குழுவும் தனது சாதனங்களில் டிக்டொக்கை பயன்படுத்த தடை விதித்துள்ளது.

டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசிகளிலிருந்து டிக்டொக் செயலியை நீக்குமாறு அந்நாட்டுப் பாராளுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், டிக்டொக் செயலின் தரவுகள் சீன அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்ளப்படும் என்ற குற்றச்சாட்டை பைட்டான்ஸ் நிறுவனம் நிராகரித்து வருகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »