சவூதி அரேபியாவும் ஈரானும் தமக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை மீள ஸ்தாபிப்பதற்கு இணங்கியுள்ளயுள்ளதாக அறிவித்துள்ளன.
2 மாதங்களுக்குள் தூதரகங்களை மீளத் திறப்பதற்கும், 20 வருடங்களுக்கு முன்னர் கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு மற்றும் பொருளாதார உடன்படிக்கைகளை அமுல்படுத்துவதற்கும் இந்நாடுகள் வெள்ளிக்கிழமை இணங்கியுள்ளன.
சீனாவின் அனுசரணையுடன் இவ்விரு நாடுகக்கும் இடையில் இணக்கப்பபாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கில் எதிராளிகளாக காணப்பட்ட சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகள் மீள ஸ்தாபிக்கப்படுவது அப்பிராந்தியத்தில் புதிய திருப்புமுனையாகும்.
2016ம் ஆண்டுக்குப் பின்னர் சவூதி அரேபியா - ஈரானிய ராஜதந்திரி உறவுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஷியா மதத் தலைவரான நிம்ர் அல்-நிம்ருக்கு 2016ம் ஆண்டு சவூதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றியது. அதன்பின், ஈரானில் சவூதி அரேபிய தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரானுடனான உறவை சவூதி அரேபியா துண்டித்துக்கொண்டிருந்தது.
இந்நிலையில், இவ்விரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சீனாவில் 5 நாட்கள் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதன்பின் உறவுகளை மீள ஸ்தாபிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பேச்சுவார்த்தைகள் குறித்து முன்னர் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குமுன் ஈராக், ஓமானிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருந்தன.
சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவுகள் மீள ஸ்தாபிக்கப்படுவது மத்திய கிழக்கு பிராந்தியத்தின் உறவுகளில் புதுவடிவத்தை ஏற்படுத்தும் சாத்தியமுள்ளதாக கருதப்படுகிறது.
இவ்விரு நாடுகளும் யமன் யுத்தம் உட்பட பல மோதல் வலயங்களில் எதிரெதிர் தரப்புகளுக்கு ஆதரவளித்து வருகின்றன. சிரியா, லெபனான், ஈராக் முதலான நாடுகளில் தமது செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கும் போட்டியிடுகின்றன.
சவூதி அரேபியாவுடனான உறவுகள் மீள ஸ்தாபிக்கப்படுவதை வரவேற்ற ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹ், பிராந்தியத்தின் ஏனைய முன்முயற்சிகளுக்கு ஈரான் தயாராகுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சரான இளவரசர் பைசால் பின் பர்ஹான் அல் சௌத் கருத்துத் தெரிவிக்கையில், பிராந்தியத்தில் சுமுக நிலையை ஏற்படுத்தும் நோக்குடன் அரசியல் தீர்வுகளுக்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் சவூதி அரேபியா தயாராகவுள்ளமையினால் இந்த இணக்கப்பாடு ஏற்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஈரான், சவூதி அரேபிய இணக்கப்பாட்டை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸ் வரவேற்றுள்ளார். இதற்கு உதவியமைக்காக சீனாவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
வளைகுடா பிராந்தியத்தில் நிலையான அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவ ஐநா செயலாளர் நாயகம் தயாராகவுள்ளார் என அவரின் பேச்சாளர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேரவை பேச்சாளர் ஜோன் கேர்பி கருத்துத் தெரிக்கையில், யமனில் அமைதியை ஏற்படுத்த இந்த உடன்பாடு உதவுமானால் நாம் அதை வரவேற்கிறோம் எனக் கூறியுள்ளார்.
ஆனால், இந்த உடன்பாட்டின் தமது கடப்பாடுகளை ஈரானியர்கள் நிறைவேற்றுவார்களா என்பதை பொருந்திருந்து பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரான்ஸும் இந்த உடன்பாட்டை வரவேற்றுள்ள அதே வேலை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை ஈரான் கைவிட வேண்டும் என பிரான்ஸ் கூறியுள்ளது.
ஈரானின் ஆதரவைக் கொண்ட, லெபனானின் ஹிஸ்புல்லாஹ் இயக்கமும் இந்த உடன்படிக்கை சிறந்த முன்னேற்றம் என வரவேற்றுள்ளது. ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தை சவூதி அரேபியா 2016ம் ஆண்டு முதல் பயங்கரவாத இயக்கமாக அறிவித்து, தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.