உள்ளாட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரம் நாடு முழுவதும் பெரும் கட்சிகளினால் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டின் பல பாகங்களிலும் பாரிய அளவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் ஒவ்வொரு நாளும் பல கூட்டங்களில் வேட்பாளர்களை ஆதரித்து பேசி வருகிறார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டா ஆட்சியில் இருந்த போது ஜனாதிபதிக்கு அதிக அதிகாரத்தை கொடுத்த 20ம் அரசியல் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக முஸ்லிம்களின் கொரோனா ஜனாஸாக்களை அடக்கவிடாமல் எரிப்பதற்கு உத்தரவிட்டு முழு முஸ்லிம்களும் வீதியில் இறங்கி போராடிய நிலையில் கோட்டாவை ஆதரித்து, அவருக்கு மேலதிக அதிகாரத்தை வழங்கிய முஸ்லிம் MP க்கள் தற்போது தமது கட்சிகளுடன் இணைந்து தாம் எந்தக் குற்றமும் செய்யாதவர்களை போலும் முஸ்லிம்களின் உரிமைக்கான குரல் தாம் மாத்திரம் தான் என்பது போலவும் பேசி வருவதை கவனிக்க முடிகிறது.
மு.க தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் தன் கட்சி சார்பில் கோட்டாவை ஆதரித்து 20க்கும் கையுயர்திய தனது MP க்களான ஹரீஸ், ஹாபிஸ் நஸீர், பைசல் காசிம் மற்றும் தௌபீக் ஆகியோரை மன்னித்து விட்டதாக அறிவித்து ஹாபிஸ் நஸீரை தவிர்த்து மற்றவர்களை கட்சியிலும் இணைத்து விட்டார்.
முழு சமூகத்திற்கும் துரோகமிலைத்தவர்களை வெறும் வாக்கு வங்கி அரசியலுக்காக மீண்டும் ரவுப் ஹக்கீம் கட்சியில் இணைத்துள்ள நிலையில், ரிஷாத் பதியுத்தீனின் அஇமக கட்சி சார்பில் 20ம் திருத்தத்தை ஆதரித்த இஷாக் ரஹ்மான், முஷர்ரப் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் இதுவரை கட்சியில் இணைக்கப்படாமல் இருக்கும் அதே நேரம் கட்சிக்கும் சம்பந்தப்பட்ட 3 MP க்களுக்கும் இடையில் பணிப்போர் நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் அஇமக சார்பில் SJB ஊடாக பாராளுமன்றம் நுழைந்த இஷாக் ரஹ்மான் 20ம் திருத்தத்திற்கு தான் கையுயர்த்தியதையும் ஜனாஸா எரிப்பையும் மக்கள் மறந்திருப்பார்கள் அல்லது மக்களின் மறதியை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில் SJB யின் தேர்தல் பிரச்சார மேடைகளில் ஏறி வருகிறார்.
அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இஷாக் ரஹ்மான் நாட்டில் எந்தப் பகுதியில் SJB கூட்டம் சஜித் தலைமையில் நடந்தாலும் முந்திக் கொண்டு சென்று மேடையில் ஏறியிருப்பதை காண முடிகிறது.
கூட்டத்தை ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டாளர்களை முற்கூட்டி தொடர்பு கொண்டு தான் ஒரு MP என்கிற வகையில் தானும் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்வதாக கூறி மேடையேறுவதாக SJB தரப்பு முக்கியஸ்தர்கள் கூறி வருகிறார்கள்.
அந்த வகையில்தான் அண்மையில் காத்தான்குடியில் இடம்பெற்ற சஜித் பிரேமதாச கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கும் செல்வதற்கு காத்தான்குடி வரை சென்ற இஷாக் ரஹ்மான் MP அங்கிருந்து காத்தான்குடியில் கூட்டம் நடக்கும் இடம் பற்றி ஏற்பாட்டாளர்களுக்கு தொடர்பு கொண்டு கேட்ட நேரத்தில் 20 ஐ ஆதரித்தவர்களுக்கு எமது ஊர் மேடையில் இடம் தரமாட்டோம் எனக் கூறி இஷாக் ரஹ்மானை கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம்களுக்கும், முழு மனித சமூகத்திற்கும் ஜனாஸாவை கூட அடக்கத் தராமல் தீயில் போட்டு எரித்த கொடுமையை செய்த கோட்டாவுக்கு அதிகாரமளித்த MP க்கள் நாடு முழுவதும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட வேண்டும். அப்படி புறக்கணிக்கப்படும் போதுதான் முஸ்லிம் அரசியல் தூய்மையடையும். அந்த வகையில் காத்தான்குடி SJB ஏற்பாட்டாளர்கள் பாராட்டுக்குறியவர்கள்.
தீன்