ஆர்.ராம்
13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்குவதை கட்டுப்படுத்தும் மூன்று சட்ட ஏற்பாடுகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுடன் அண்மையில் நடத்திய சந்திப்பின்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற தொடர்ச்சியான சந்திப்புக்களின்போது, 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி அளித்தார்.
அச்சமயத்தில், 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு குறித்த சட்டம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சில சட்ட ஏற்பாடுகள் தடைகளை ஏற்படுத்துவதாக தமிழ்த் தரப்புக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து, ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் எம்.பி. 13ஆவது திருத்தத்தினை கட்டுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பில் காணப்படுகின்ற ஏனைய ஏற்பாடுகள் தொடர்பில் குறிப்பிட்டும் அது தொடர்பில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்களை சுட்டிக்காட்டியும் ஆவணங்களை வழங்கியிருந்தார்.
எனினும், தமிழ்த் தரப்பினால் வழங்கப்பட்ட அவகாச காலப்பகுதிக்குள் முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்படாமையால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுக்கள் தொடரப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அண்மையில் சந்தித்த சுமந்தின் எம்.பி, 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தாம்மால் வழங்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா உட்பட ஏனைய தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் சுமந்திரன் எம்.பியிடம் வினவியபோது, ஜனாதிபதி ரணிலுடன் சந்திப்பொன்றை நடத்தியதை உறுதி செய்த அவர் குறித்த சந்திப்பின்போது, தன்னால் வழங்கப்பட்ட ஆவணங்களுக்கு அமைவாக 13ஐ கட்டுப்படுத்தும் மூன்று சட்டங்களை திருத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார் என்றார்.
அதற்கு அமைவாக, குறித்த மூன்று சட்டங்களும் சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அப்பணிகள் நிறைவடைந்தவுடன் அமைச்சரவை அனுமதியைப் பெற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தாக சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.
அப்போது, கடந்தகாலத்திலும், 13ஆவது திருத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டாலும் அதற்கான நடவடிக்கைகள் வேகமெடுக்கப்படவில்லை என்று சுமந்திரன் ஜனாதிபதியிடத்தில் சுட்டிக்காட்டியதோடு, குறித்த விடயத்தினை விரைந்து முன்னெடுக்கும் பட்சத்திலேயே உங்கள் மீது(ரணில்) நம்பகத்தன்மை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறிருக்கையில், சுமந்திரன் ஜனாதிபதியிடத்தில் வழங்கிய ஆவணத்திற்கு அமைவாக தற்போது முன்னெடுக்கப்பட்ட மூன்று சட்ட திருத்த நடவடிக்கைகளில், அதிகாரங்கள் மாற்றம், அடுத்துறு ஏற்பாடுகள், மாகாண சபைகளுக்கான சட்டம் ஆகியவற்றிலேயே மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது.
குறிப்பாக, அதிகாரங்கள் மாற்றம் செய்யும் விடயத்தில், 1992 ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க அதிகாரங்களை மாற்றுதல் (பிரிவுச் செயலாளர்கள்) சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது
அடத்துரு சட்டத்தில் 1989 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க மாகாண சபைகள் (அடத்துரு ஏற்பாடுகள்) சட்டமாக மேற்கோள் காட்டப்படுவதோடு, வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஆணை மூலம் அமைச்சர் நியமிக்கும் திகதி நடைமுறைக்கு வராது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மாகாண சபைகள் திருத்தச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. குறிப்பாக, பொதுச்சோவை ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாகாணத்திற்கு வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.