அமெரிக்காவில் காலநிலை மாற்றத்தின் எதிரொலியால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த குளிர்காலம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 'வெடிகுண்டு சூறாவளி' என்று அழைக்கப்படும் பயங்கர பனிப்புயல் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உறையவைத்தது.
நேற்று முன்தினம் அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களை அதிபயங்கர புயல் தாக்கியுள்ளது.
கென்டக்கி, அலபாமா, கலிபோர்னியா, மிசிசிப்பி உள்ளிட்ட மாகாணங்களில் மணிக்கு 129 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசியதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மின்கம்பங்கள் சரிந்தன. வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றின் மேற்கூரைகள் பல மைல் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டன.
இடைவிடாது கொட்டிய கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 7 மாகாணங்களில் பல முக்கிய இடங்களில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதோடு, விமான சேவையும் முடங்கியுள்ளது.
இதனிடையே புயல் காரணமாக ஏற்பட்டுள்ள மின்தடையால் 7 மாகாணங்களில் சுமார் 14 லட்சம் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.
புயல் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.