வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானின் பாகர் அல் ஹசால் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ஒரு மர்ம பொருள் அருகே கிடந்தது. இதனை பார்த்த சிறுவர்கள் அதனை தங்களது கையில் எடுத்து விளையாட ஆரம்பித்தனர்.
அப்போது அந்த மர்ம பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி சென்று பார்த்தனர்.
அப்போது விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து அவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதில் 11 சிறுவர்கள் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர். ஒரு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் இதில் சிறுவர்கள் கையில் வைத்திருந்த மர்ம பொருள் உள்நாட்டு போரின் போது வீசப்பட்ட வெடிக்காத சக்திவாய்ந்த வெடிகுண்டு என்பதும், அதனை அறியாத சிறுவர்கள் கையில் வைத்து விளையாடியதால் இந்த விபரீதம் ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.
சோகத்தில் மூழ்கிய கிராமம் விளையாட சென்ற இடத்தில் குண்டு வெடித்து 11 சிறுவர்கள் பலியான சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.