அரசாங்கத்தின் கீழ் உள்ள 100க்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்கள், முகவரகங்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்களின் சேவைகள் தேவைப்படாத நிலையில், அவற்றின் செயற்பாடுகளை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆணைக்குழுக்கள், முகவரகங்கள் அல்லது ஆலோசனைக்குழுக்களின் சேவைகளை அதுசார் நிறுவனங்கள் அல்லது திணைக்களங்கள் ஊடாக செய்ய முடியும் என்பதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய சம்பளங்கள் மற்றும் பதவியணிகள் ஆணைக்குழுவின் சேவைகள் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டு, அதன் செயற்பாடுகள் நிதியமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுவரையில் குறைந்தபட்சம் 50 ஆணைக்குழுக்கள் மற்றும் ஆலோசனைக்குழுக்கள் மூடப்படுவதற்கு பட்டியலிடப்பட்டுள்ளன, அத்துடன் இதுபோன்ற 50 ஆணைக்குழுக்கள் அடையாளம் காணப்பட உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சுமார் 17 நிறுவனங்கள் கல்வி அமைச்சின் கீழ் இயங்குகின்றன, விரைவில் அவற்றின் செயற்பாடுகள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்படவுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.