Our Feeds


Wednesday, February 15, 2023

SHAHNI RAMEES

#Update: துருக்கி - சிரியா நிலநடுக்கம் : இடிபாடுகளில் இருந்து 8 ஆயிரம் பேர் உயிருடன் மீட்பு..!

 

துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6-ம் திகதி அதிகாலை ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 



இது அங்கு 10-க்கும் மேற்பட்ட மாகாணங்களை உலுக்கியது.



நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்தன. 



வானளவுக்கு உயர்ந்து நின்ற கட்டிடங்கள் நொடிப்பொழுதில் தரைமட்டமாகின. நிலநடுக்கம் ஏற்பட்டது அதிகாலை நேரம் என்பதால் தூக்கத்திலேயே நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோயின. 



தோண்ட, தோண்ட சடலங்கள் நிலநடுக்கம் தாக்கிய காசியான்டெப் நகரம் அண்டை நாடான சிரியாவின் எல்லையையொட்டி அமைந்திருப்பதால் இந்த நிலநடுக்கம் சிரியாவிலும் பேரழிவை ஏற்படுத்தியது. 



உள்நாட்டு போரினால் நிலைகுலைந்து போயிருக்கும் சிரியாவை இந்த நிலநடுக்கத்தின் மூலம் இயற்கையும் தன் பங்குக்கு சிதைத்துவிட்டது. 



நிலநடுக்கம் தாக்கி ஒரு வாரம் ஆகியும் இருநாடுகளிலும் அழு குரலும், மரண ஓலமும் ஓயாமால் ஒளித்துக் கொண்டிருக்கிறது.



கட்டிடக்குவியலை தோண்ட, தோண்ட பிணங்கள் கிடைக்கின்றன.



இதனால் இருநாடுகளிலும் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் இயற்கையின் இந்த ருத்ர தாண்டவத்துக்கு இதுவரை 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்னர். 



துருக்கியில் 31,974 உயிர்களும், சிரியாவில் 5,800 உயிர்களும் பறிபோனதாக தகவல்கள் கூறுகின்றன. இதுதவிர இருநாடுகளிலும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 



சர்வதேச நாடுகள் அனுப்பிவைத்த மீட்பு குழுக்களின் உதவியுடன் இருநாடுகளிலும் ஒரு வாரத்துக்கும் மேலாக இரவு, பகலாக மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. 



இதில் அதிசயத்தக்க வகையில் கட்டிட இடிபாடுகளில் இருந்து பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமிகள் உள்பட பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர். 



8 ஆயிரம் பேர் உயிருடன் மீட்பு அந்த வகையில் நேற்று துருக்கியின் ஹடே மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட 201 மணி நேரத்துக்கு பிறகு கட்டிட இடிபாடுகளில் இருந்து 26 வயது இளம் பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். 



இந்த நிலையில் துருக்கியில் மட்டும் இதுவரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். 



இதனிடையே நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியா ஆகிய இரு நாடுகளுமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் துருக்கியில் மட்டுமே வெளிநாட்டு உதவிகள் குவிந்து வருவதாக சிரியா கவலை தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »