(இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நிச்சயம் இடம்பெறும். ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கமொன்று தோற்றம் பெறாவிடின், நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
களுத்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (12) மாலை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேர்தலை கண்டு அச்சமடைய வேண்டிய தேவை பொதுஜன பெரமுனவுக்கு கிடையாது. ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார்கள்.
ஆகவே, பெரும்பான்மை மக்கள் ராஜபக்ஷர்களுக்கு ஆதரவு வழங்குவார்கள். பல்வேறு காரணிகளால் பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியை தோற்றுவித்தது.
பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் கூட்டணியாக ஒன்றிணைந்தவர்கள் தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக 69 இலட்ச மக்களாணையை பலவீனப்படுத்தினார்கள்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக மாத்திரம் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்து, அவர் தலைமையில் அரசாங்கத்தை ஸ்தாபித்தோம்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளதால் பொதுஜன பெரமுனவின் அடிப்படை கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 9ஆம் திகதி நிச்சயம் இடம்பெறும். பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை முன்னிலைப்படுத்தி மொட்டு சின்னத்தில் போட்டியிடுவோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காக கொண்டு வீடு வீடாகச் செல்வோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பின் போது மக்கள் நாட்டுக்கு யார் சேவையாற்றியுள்ளார்கள், யார் நாட்டை சீரழித்தார்கள் என்பதை ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெறாவிடின் நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது என்றார்.